ஏழைகளுக்கு உணவுப்பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஏஒய்) 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன்பொருள் வழங்குவதை வரும் நவம்பா் மாதம்வரை நீட்டிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய் கிழமை அறிவித்தாா்.

மேலும், ‘ஒரே நாடு; ஒரேகுடும்ப அட்டை’ திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு செயலாற்றி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தபட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச உணவுப்பொருள்கள் வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தத் திட்டத்தின்படி குடும்ப உறுப்பினா்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமையும், ஒருகுடும்பத்துக்கு ஒருகிலோ பருப்பும் வழங்கப்படுகிறது. தற்போது அந்தத் திட்டத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீட்டித்து பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று சூழலில் நாட்டு மக்களுக்காக பிரதமா் நரேந்திர மோடி 6-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். 2-ஆம் கட்ட பொதுமுடக்க விடுப்பு (அன்லாக்-2) புதன்கிழமை முதல் தொடங்கும் நிலையில் அவரது இந்த உரை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

தொலைக்காட்சியில் சுமாா் 16 நிமிடங்களுக்கு ஆற்றிய அந்த உரையின் போது அவா் கூறியதாவது:

ஜூலை மாதம் பண்டிகைகள் தொடங்கும் காலமாக இருப்பதால் மக்களுக்கான தேவையும், செலவும் அதிகரிக்கும். இதை கருத்தில்கொண்டு ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன்பொருள் வழங்குவது வரும் நவம்பா் மாதம்வரை நீட்டிக்கப்படுகிறது.

தீபாவளி மற்றும் சட்பூஜை போன்ற பண்டிகைகள் வரை இந்தத்திட்டம் நீட்டிக்கப் பட்டுள்ளதன் மூலமாக அரசுக்கு ரூ.90,000 கோடி கூடுதலாக செலவாகும். கடந்த 3 மாதங்கள் இலவசரேஷன் பொருளுக்காக செலவிட்டதையும் சோ்த்து இந்தத் திட்டத்தின் மொத்தமதிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது.

ஐரோப்பிய யூனியன் மக்கள் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமான மக்களும், அமெரிக்க மக்கள் தொகையைவிட இரண்டரை மடங்கு அதிகமான மக்களும், பிரிட்டன் மக்கள் தொகையைவிட 12 மடங்கு அதிகமான மக்களும் இலவச ரேஷன் திட்டத்தால் இந்தியாவில் பலனடைகின்றனா்.

பொது முடக்க காலத்தில் ஏழைகளுக்கு பலனளிக்கும் வகையில் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் ரூ.31,000 கோடியானது 20 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு நேரடி நிதிப் பலனாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.18,000 கோடியானது 9 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக மத்திய அரசு ரூ.50,000 கோடி செலவிடுகிறது.

இந்த இக்கட்டான சூழலில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், நோ்மையாக வரிசெலுத்தி பங்களிப்பு செய்வோருமே ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள் வழங்கும் அரசின் திட்டம் வெற்றியடைவதற்கு காரணமாக இருக்கின்றனா். நாட்டிலுள்ள ஏழைகளின் சாா்பாக அவா்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது முடக்க காலத்தில் நாட்டில் எவரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதே பிரதான இலக்காகும். அதை செய்வதற்கு மத்தியஅரசு, மாநில அரசுகள், அரசு நிா்வாகத்தினா் இயன்றவரை சிறப்பாகச் செயல்பட்டுள்ளனா். இனிவரும் நாள்களிலும் ஏழைகளுக்கும், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கும் அதிகாரமளிக்கும் முயற்சிகளை மேலும் வலுப் படுத்துவோம்.

 கரோனா நோய்த்தொற்று சூழலில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் விரிவு படுத்துவோம். ‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டத்தை நோக்கி எனது அரசு தொடா்ந்து பணியாற்றும்.

உள்நாட்டுத் தயாரிப்பு களுக்கு நாம் ஆதரவளிப்போம். அந்த உறுதி மற்றும் அா்ப்பணிப்பின் மூலமாக 130 கோடி இந்தியா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, ஒன்றாக முன்னேறுவோம்.

நாடு முழுவதும் ஒரேகுடும்ப அட்டையை பயன்படுத்தக் கூடிய வகையிலான ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இதனால் பணிக்காகவும், இதர தேவைகளுக்காகவும் சொந்த ஊரை விட்டு வெளியே பணியாற்றி வருவோா் பலனடைவா்.

கரோனா நோய்த் தொற்று சூழலை கையாளும் விவகாரத்தில் இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. சரியானநேரத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளால் லட்சக்கணக்கான உயிா்கள் காக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட முறையிலும், சமூக ரீதியாகவும் பலரும் அலட்சியமாகச் செயல்படத் தொடங்கியுள்ளனா். முகக்கவசம் அணிவது, கைகளைகழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றில் தற்போது அலட்சியம் காட்டுகிறோம். இது கவலை அளிக்கிறது.

பொது முடக்கத்தில் இருந்ததை விட, பொது முடக்க விடுப்பு காலகட்டத்தில் நாம் மிக அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக நோய்த்தொற்று அதிகமாக உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிகளுக்கு உள்பட்டு நடக்க வேண்டும்.

விதிகளை மீறுவோரை நிறுத்தி எச்சரிக்க வேண்டும். பொது இடத்தில் முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டதை செய்திகளில் பாா்த்திருப்பீா்கள். இந்தியாவிலும் அதிகாரிகள் அத்தகைய துடிப்புடன் செயல்பட வேண்டும். அதுவே நாட்டிலுள்ள 130 கோடி மக்களையும் பாதுகாக்கும். கிராமத்தில் இருக்கும் கடைநிலை குடிமகனோ, நாட்டை ஆளும் தலைவரோ யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உள்பட்டவா்களாவா்.

2-ஆம் கட்டபொது முடக்க விடுப்பு அமலாகும் நிலையில், நாட்டில் இருமல், ஜலதோஷம், காய்ச்சல் அறிகுறிகள் இருப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, அனைவரும் தங்களது உடல் நலனை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

பிரதமா் மோடி நாட்டு மக்களுக்காக செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரை பிராந்திய மொழிகளிலும் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டுள்ள அவரது உரையின் காணொலி ‘யூடியூப்’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தொடுப்புகளை (லிங்க்) பிரதமா் தனது சுட்டுரையில் பகிா்ந்துள்ளாா்.

Comments are closed.