இதைச் சொல்லுகிற தைரியமும் குணமும் எனக்குண்டு. நீங்கள் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ ஒரேயொருமுறை இருந்துவிட்டால் போதும். அவ்வளவுதான். உங்கள் இயல்பே மாறிவிடும். அதுவொரு போதை. அதிலிருந்து விலகி, உங்களின் சாதாரண வாழ்க்கையையும் வேலைகளையும் உங்களால் பார்க்கமுடியாது. நல்லவேளையாக, அந்தபோதை என் புத்திக்குள் ஏறவே இல்லை’

– கோவாவின் முதல்வராக இருந்து (17.3.19) மரணமடைந்த மனோகர் பாரிக்கர் சொன்னவரிகள் இவை.

மனோகர் பாரிக்கருக்கு கோவாதான் பூர்வீகம். 1955-ம் ஆண்டு மபுஸா எனும் மாவட்டத்தில் பிறந்தவர், பள்ளிக்காலத்திலேயே பள்ளிப்பாடங்களுடன் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ்.சிந்தனைகளும் இவருக்குள் விதைத்து முளைந்தன.

அடுத்து கல்லூரிப் படிப்புக்குச் சென்றபோது அது இன்னும் வளர்ந்திருந்தது. கூடவே படிப்பும்தான். மும்பை ஐஐடியில் படிப்பு. அந்தக் காலத்தில், இப்போது மாதிரி ஐஐடி நிறைய இடங்களில் இல்லை. ஐஐடியில் இடமும்குறைவு. கிடைப்பதும் அரிது. அதில் படித்து வென்றார் மனோகர் பாரிக்கர்.

இப்போது ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து ராமஜென்ம பூமி இயக்கத்துக்குள் தன்னை பொருத்திக்கொண்டார். மிகுந்த வேகத்துடன் செயல்பட்டார். ஒரு பக்கம் பிஸ்னஸ், இன்னொருபக்கம் அரசியல் என்று இரண்டிலுமே பொறுப்புடன் பணியாற்றிவந்தார்.

94-ம் ஆண்டு. பாஜகவின் வேட்பாளராக கோவாவில் நின்றார். அது அவருக்குமட்டுமல்ல… கோவாவில் பாஜக முதல் முறையாக களமிறங்கியது. நான்குபேர் வென்றனர். அவர்களில் மனோகர் பாரிக்கரும் ஒருவர்!

ஒரு எம்எல்ஏ.வாகப் புகுந்தவர், அடுத்தகட்டமாக எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். அதையடுத்து கோவாவின் முதல்வராகவும் பதவி வகித்தார்.

கோவா ஒரு யூனியன் பிரதேசம். சின்ன மாநிலம். அதன் முதல்வர் மனோகர் பாரிக்கர். ஆனால், கட்சியில் இவரின் உயரஅகலம் விஸ்தரித்துக்கொண்டே இருந்தது.

2014-ம் ஆண்டு, தேர்தல்சமயத்தில், இந்தியாவே ‘அடுத்து மோடி, அடுத்து மோடி’ என்ற அலை பரவியது நினைவிருக்கிறதா? ‘அடுத்து மோடியே பிரதமராக வேண்டும்’ என மோடிப் பக்கம் சுட்டுவிரல் காட்டி, பாஜகவை திரும்பச்செய்தவர் மனோகர் பாரிக்கர்தான்.

இதில் நெகிழ்ந்த மோடி, ஆட்சிக்கு வந்ததும் மனோகரை பாதுகாப்புத்துறை அமைச்சராக்கி அழகபார்த்தார். மாநில அரசியலில் இருந்து மத்திய அரசியலுக்கு வந்தார் மனோகர் பாரிக்கர்.

டெல்லி லாபி.பிடிக்கவே இல்லை அவருக்கு. ‘என்னை விட்ருங்களேன். கோவா அரசியலேபோதும் எனக்கு’ என்று மாநில அரசியல் மீது மையல் கொண்டிருந்ததைத் தெரிவித்தார். அதேசமயம், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தகாலத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இவர் நிகழ்த்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுத்தந்தது.

கோவா அரசியலுக்கு மீண்டும் அனுப்பப்பட்டார். மாநிலத்தின் முதல்வரானார். இந்த முறை மதவாதத்தில் இருந்து விலகி அல்லது விலகியது போலான செயலில், மக்களை ஈர்க்கவேண்டும் என உறுதி கொண்டார். ‘இல்லத்தரசிகளுக்கான மாதவருமானத் திட்டம்’ என்பதைக் கொண்டுவந்து பெண்களை ஈர்த்தார்.

அடுத்து, ‘பெண் குழந்தைகளுக்கு திருமண பொருளாதார உதவி’ எனும் திட்டம், இன்னும் கவனத்தைக்கவர்ந்தது. ஒருபக்கம் இந்துத்துவா, இன்னொரு பக்கம் எல்லா மக்களுக்குமான நல்ல திட்டம்.

மக்கள் மனசுக்கு நெருக்கமாகும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தமுறை ரொம்ப அக்கறையுடன் இருந்தார் மனோகர் பாரிக்கர். ஆனால், உடலுக்குள் திடீரென வந்திறங்கி ஆக்கிரமித்தது கணையப் புற்றுநோய்.

கோவா, மும்பை, எய்ம்ஸ், அமெரிக்கா என சிகிச்சைகள் பல விதங்களில் நடந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இளைக்கத் தொடங்கினார். எந்நேரமும் டியூப்பொருத்தப்பட்ட நிலையில், வலம் வந்தார். பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

அவரின் எளிமையும் படாடோபம் இல்லாமல் பழகுகிற விதமும் கண்டு எதிர்க்கட்சியினரே வியந்து போற்றினார்கள். அவருக்கு இப்படியொரு வியாதி வந்துவிட்டதே என்று கவலைபட்டார்கள்.

அத்தனை சிகிச்சைகளும் பலனில்லாமல், 17.3.19-ம் தேதி இரவு, காலமானார் மனோகர் பாரிக்கர்.

கோவா மாநிலமே, கதறிக்கொண்டிருக்கிறது. எங்குபார்த்தாலும் அமைதியும் எவரைப் பார்த்தாலும் ஓர் இறுக்கமும் என சோகம் சூழக் கிடக்கிறது கோவா.

ஒருமுறை, காவல் ஆணையரின் மகன் காரில் சீறிப் பறந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காட்டுத்தனமாக வேகத்தில் வந்த அந்த இளைஞன், ஓரிடத்தில் திரும்புகிற போது பிரேக் பிடித்து, வேகத்தை சட்டெனக் குறைத்து, முன்னே சென்ற டூவீலர்காரரின் மீது மோதிவிட்டான்.

அந்தப் பையனுக்கு ஆத்திரமான ஆத்திரம். விறுவிறுவென டூவீலர் அருகே சென்றான். ‘என்னய்யா வண்டி ஓட்டுறே? நான்யாரு தெரியுமா இங்கே உள்ள போலீஸ் கமிஷனரோட பையன்’ என்று ஸ்டைலாகவும் கோபமாகவும் சொன்னான்.

டூவீலர் ஓட்டி வந்த அந்த நபர், வண்டியைச் சரிசெய்து விட்டு, ஆடையில் ஒட்டியிருந்த தூசியை  தட்டிவிட்டு, டூவீலரில் ஏறி, வண்டியை ஸ்டார்ட்செய்தார்.

அந்தப் பையனைத் திரும்பிப் பார்த்தார்… பார்த்தவர் சொன்னார்…

‘அப்படியா தம்பி. நீங்க போலீஸ் கமிஷனரோட மகனா? நான் சாதாரண சி.எம்.தாம்பா. எம்பேரு மனோகர் பாரிக்கர்’ என்றார் அவர்.

Leave a Reply