மக்களவையில் மத்திய பொதுபட்ஜெட் உரைக்குப்பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது இருக்கைக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

17-ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாவது முறையாக அமைந்த பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக முழுநேர நிதியமைச்சராகவும், முதல் பெண் நிதியமைச்சராவுகம் நிர்மலாசீதாராமன் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, அவர் முதல் முறையாக பொது பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

புதிய இந்தியாவுக்கான பட்ஜெட் எனும் வகையில் உரையைத்தொடங்கிய அவர், தொடர்ந்து 2 மணிநேரம் 5 நிமிடங்கள் பேசினார். அவ்வப்போது சாணக்கியரின் நீதிவரிகள், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகியோரின் பொன்மொழி ஆகியவற்றை தனது உரையில் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஏழைமக்களுக்கு கழிப்பறை, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து உரையில் குறிப்பிட்டார். முக்கிய அறிவிப்பு களையும், விஷயங்களையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டபோது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும், ஆளும்கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பட்ஜெட் உரையை வாசித்துவிட்டு அவர் தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, முதல் முறையாக பட்ஜெட் தாக்கல்செய்த பெண் அமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். அவருக்கு வாழ்த்துகள் என்றார்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது இருக்கையில் இருந்து எழுந்து நிர்மலா சீதாராமன் அமர்ந்திருந்த இருக்கைக்குச்சென்றார். அப்போது எழுந்த அவரை பிரதமர் வணக்கம் தெரிவித்து வாழ்த்திப் பாராட்டினார். இதைத் தொடர்ந்து, மூத்தஅமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவி சங்கர் பிரசாத், அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். அதே போன்று, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Comments are closed.