தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வரும் நிலையில் , மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருது நகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றுவது தொடர்பாக விருதுநகரில் கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலாசீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் துறைவாரியாக அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினர். இந்தகூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் சிவஞானம், விருதுநகர் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பிரவீண்குமார், அரசின் இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சந்தோஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வில், மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘இந்தியாவில் 115 மாவட்டங்கள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வாகி உள்ளன. அடுத்த 6 மாதத்திற்கு விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி அடைந்தமாவட்டங்களின் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது,’’ என்றார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விருதுநகரைச் சேர்ந்தவர்கள் தேசிய மற்றும் உலகளவில் வியாபாரம் செய்கின்றனர். திறமைவாய்ந்தவர்கள் இருக்கும் இந்த மாவட்டம் பின் தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் இருப்பது வருத்தமளிக்கிறது.

ஏழ்மை, அடிப்படை கட்டமைப்பு இல்லாததே முக்கிய காரணமாகும். ஏப். 1 முதல் மாவட்டத்தில் ஒவ்வொரு துறைவாரியாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து கணினியில் பதிவுசெய்யப்படும். பட்டாசு தொடர்பான வழக்கால் ஆர்டர் கிடைக்காது என ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை மூடினர். இந்த வழக்கில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களும் சேர்ந்துகொள்ள வேண்டும். 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், மாநில அரசும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ளவேண்டும்’’ என்றார்.

Tags:

Leave a Reply