எம்பிபிஎஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நாடுமுழுவதும் நடத்தப்பட்ட நீட் (NEET) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

நீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

நீட் தேர்வு மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில்  தேர்வு நடைபெற்றது. நாடுமுழுவதும்  2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது.

தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை தமிழகத்தில் மட்டும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். இதில் சுமார் 7 லட்சம்பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

நீட் 2019 தேர்வில், ராஜஸ்தானைச் சேர்ந்த நலின் கந்தேல்வால் அனைத்திந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். நலின், மொத்தம் உள்ள 720 மதிப்பெண்களில் 701 மார்க் எடுத்துள்ளார். டெல்லியைச்சேர்ந்த பாவிக்பன்சால் என்ற மாணவர் இரண்டாம் இடத்தையும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அக்‌ஷத் கவுஷிக் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

பெண்களைப் பொறுத்தவரை தெலங்கானாவைச் சேர்ந்த மாதுரி ரெட்டி, 695 மதிப்பெண்கள் எடுத்து 7வது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை. தேசிய அளவில் 57-ஆவது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளி பிரிவில் தமிழக மாணவர் கார்வண்ண பிரபு 575 மதிப்பெண்கள் பெற்று 5-ஆவது இடத்தை பெற்றுள்ளார்.மாணவிகள் பிரிவில் தமிழக மாணவி ஸ்ருதி 10-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

 

நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவ,மாணவியருக்கு  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட்தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவ,மாணவியருக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்…தனது கடும் உழைப்பால் நீட்தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்ருதிக்கும், முயற்சி திருவினையாக்கும்…என்பதையும் சாதிக்க பிறந்தவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் நிருபித்த தமிழக மாணவ செல்வங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்…

நீட்பற்றிய பொய்யான வாக்குறுதிகளும் தவறான பிரச்சாரங்களும் குழப்பமான செய்திகள் இவற்றிற்கிடையே சாதித்துகாட்டிய சாதனை நாயகர்கள் நீங்கள்…

கல்வி வியாபாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்த நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக்  கொள்கிறேன்.

நீட்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துவண்டுபோகாமல் மறு முயற்சிசெய்து தோல்வியை வெற்றிக்கு படிகட்டாக்க வேண்டும். தற்கொலை போன்ற முடிவுகள் தீர்வாகாது என்பதை கனத்த இதயத்துடன் பதிவுசெய்கிறேன்.

நீட் தேர்வை கொண்டு வந்த மோடி அவர்களின் அரசு தமிழகத்திற்கு முன்பு இருந்ததை விட புதிதாக சுமார் 3000 இடங்களுக்கும் மேலான எம்.பி.பி.எஸ் இடங்களையும், எய்ம்ஸ் மருத்துவமனையையும் கொண்டுவந்துள்ளது. எனவே அனைவரும் நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள் நாளைய வெற்றி உங்களுக்கே….

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.