இமாச்சல பிரதேசம், குஜராத் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முறையே ஜனவரி 7 மற்றும் ஜனவரி 22-ல் முடிவடைகிறது. இந்நிலையில் இமாச்சலில் நவம்பர் 9-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல்தேதி அறிவிக்கவில்லை. இந்நிலையில் குஜராத் தேர்தலையொட்டி அந்தமாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சலுகைகள் அறிவிப்பதற்கு வசதியாக தேர்தல் அறிவிப்பை ஆணையம் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி நேற்று கூறியதாவது:

தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்துவிடும். குஜராத் தேர்தலை இப்போதே அறிவித்தால் அம்மாநிலம் நீண்டகாலம் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் இருக்கநேரிடும். இது வளர்ச்சிப் பணிகளை பாதிக்கும். இது நியாய மில்லை. நடத்தைவிதிகள் அமலுக்கு வருவதற்கு முன் நிவாரணப் பணிகளை முடிக்க உரியகால அவகாசம் வேண்டும் என குஜராத் அரசு கோரியது.

தேர்தல் அறிவிப்புக்கும் தேர்தல் அறிவிக்கை வெளியாவதற்கும் இடையிலான காலஇடைவெளி 21 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது என கடந்த 2001-ல் சட்ட அமைச்சகமும் தேர்தல் ஆணையமும் ஓர் உடன் பாட்டுக்கு வந்துள்ளன. 46 நாட்கள் மட்டுமே நடத்தைவிதிகள் அமலில் இருக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply