விவசாயிகள் உற்பத்திசெய்யும் உணவு தானியங்களை, குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் மத்தியஅரசின் இந்திய உணவுகழகம் நேரடியாக கொள்முதல்செய்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வினியோகம் செய்து வருகிறது. இதற்காக உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலையை அரசு நிர்ணயிக்கிறது.

 

நாடுமுழுவதும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் பிரதமர் நரேந்திரமோடி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

 

முன்னதாக, விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திசெலவை விட 1½ மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவுவிலை நிர்ணயிக்கப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றும் நோக்கில் கடந்த பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வெளியானது.

 

அதன்படி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபைக்குழு, 14 சம்பா (கரீப்) பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது.

 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, நெல்லுக்கு (பொது ரகம்) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.1750 (பழைய விலை ரூ.1550) ஆக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் ‘ஏ’ ரக நெல்லுக்கும் ரூ.160 உயர்த்தப்பட்டு ரூ.1750 (பழைய விலை ரூ.1590) என நிர்ணயிக்கப்பட்டது.

 

பருப்புவகைகளை பொறுத்தவரை, துவரம் பருப்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,450-ல் இருந்து ரூ.5,675 ஆகவும், பாசிப்பருப்புக்கு ரூ.5,575-ல் இருந்து ரூ.6,975 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. உளுந்தம் பருப்புக்கு ரூ.5,400-ல் இருந்து ரூ.5,600 ஆகவும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

இதைப்போல பருத்திக்கு (நடுத்தர ரகம்) ரூ.4,020-ல் இருந்து ரூ.5,150 ஆகவும், நீண்ட ரகத்துக்கு ரூ.4,320-ல் இருந்து ரூ.5,450 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

 

எண்ணெய் வித்துகளில் சோயா பீன்சுக்கு ரூ.3,050-ல் (குவிண்டால்) இருந்து ரூ.3,399 ஆகவும், நிலக்கடலைக்கு (ஓட்டுடன்) ரூ.4,450-ல் இருந்து ரூ.4,890 ஆகவும் சூரியகாந்திக்கு ரூ.4,100-ல் இருந்து ரூ.5,388 ஆகவும் உயர்த்தப்படுகிறது. எள்ளுக்கு ரூ.5,300-ல் இருந்து ரூ.6,249 ஆகவும், நைகர் விதைகளுக்கு ரூ.4,050-ல் இருந்து ரூ.5,877 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த தகவல்களை மந்திரிசபை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் விளக்கிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பிற சம்பா பருவ பயிர்களுக்கும் உற்பத்தி விலையைவிட சுமார் 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த விலை உயர்வால் மாநில அரசுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதல் செலவாகும் என்று கூறிய அவர், குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதால், உணவு தானியங்களின் விலையில் எவ்விதமாற்றமும் ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.

 

அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், இதன் மூலம் அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் கொண்டுவருவது உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாகவும், இதற்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் எவ்விததொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

 

இதற்கிடையே குறைந்தபட்ச ஆதரவுவிலை உயர்வால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தோம். எதிர்காலத்திலும் அதையே மேற்கொள்வோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Leave a Reply