மத்திய அரசின் நேரடி மானிய திட்டங்களால் ரூ.27 ஆயிரம் கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை, நேரடி மானியத் திட்டங்கள் தொடர் பாக டெல்லியில் நேற்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்பம், ஊரகவளர்ச்சி, பெட்ரோலிய துறை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.  சுமார் 2 மணிநேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதார் அடையாள அட்டை, நேரடி மானியத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நேரடி மானியத்திட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 30 கோடி பயனாளிகளுக்கு ரூ.61,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் ரூ.25,000 கோடியும் சமையல்காஸ் நேரடி மானிய திட்டத்தில் ரூ.21,000 கோடியும் அளிக்கப் பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டைகாரணமாக நாடுமுழுவதும் ஒருகோடியே 60 லட்சம் போலி ரேஷன் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.10,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இதேபோல சமையல் காஸ் நேரடி மானியத்திட்டத்தால் 3.5 கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ரூ.14,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 3,000 கோடி மிச்சமாகி உள்ளது. மத்திய அரசின் நேரடி மானியத்திட்டங்களால் ஒட்டுமொத்தமாக ரூ.27,000 கோடி சேமிக்கப்பட் டுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, தகுதியுள்ள பயனாளிகள் பாதிக்கப்படக் கூடாது, எனவே நேரடி மானியத் திட்டங்களை அதிகபட்ச கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார். ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 71 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவை தவிர ஏராளமான போலி தொண்டு அமைப்புகளும் இயங்குவதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. எனவே ஆதார் அட்டை எண் போன்று தொண்டு நிறுவனங்களும் தனி அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

Leave a Reply