சிபிஐ  அமைப்பின் இயக்குனராக அலோக் வர்மா உள்ளார். இதன் துணை அல்லது சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தனா பணியாற்றிவருகிறார். நாட்டின் மிக முக்கிய துறையான சிபிஐ-யில், இந்த இரு உயர் அதிகாரிகளுக்கும் இடையே அதிகாரயுத்தம் இருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. 

இதற்கிடையே, தனது மூத்த அதிகாரியான சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுகளை சுமத்தி துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதே போன்று லஞ்சம் வாங்கியதாக ராகேஷ் அஸ்தனா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதிசெய்ததில் பண மோசடி செய்ததாக ஐதராபாத்தை சேர்ந்த வர்த்தகர் மொய்ன்குரேஷி மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை சிபிஐ-தான் விசாரித்தது.

இந்தவழக்கில் இருந்து மொய்ன் குரேஷியை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 5 கோடி தரவேண்டும் என்று அஸ்தனா தரப்பில் கேட்டதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்துள்ளது. அதே நேரத்தில், துணை இயக்குனராக அஸ்தனாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தபோது, அதற்கான அனுமதியை பிரதமர் அலுவலகத்திடம் சிபிஐ கேட்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸ்தனாவுக்கு கீழ் பணியாற்றிய அதிகாரி தேவேந்திரகுமார் என்பவரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.

 

இத்தகைய சூழலில்தான் நேரில் தன்னை சந்திக்குமாறு சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு பிரதமர் மோடி சம்மன் அனுப்பி உள்ளார். 

Leave a Reply