ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த மாதம் பயங்கர வாதிகளால் கடத்தப்பட்ட இந்தியப் பெண் ஜூடித் டிசெüஸா சனிக்கிழமை தாயகம் திரும்பினார்.

"ஆகா கான் ஃபவுண்டேஷன்' என்ற சர்வதேசத் தொண்டுநிறுவனத்தின் அலுவலகம், காபூலின் மையப் பகுதியில் உள்ளது. அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த ஜூடித் டிசெüஸா, கடந்த மாதம் 9-ம் தேதி அவரது அலுவலகத்துக்கு வெளியே பயங்கர வாதிகளால் கடத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய அரசு மேற்கொண்ட தொடர்முயற்சிகளின் காரணமாக அவர் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டார். இந்நிலையில் ஜூடித், தில்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை மாலை 6 மணியளவில் வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்து அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு சுஷ்மாவைச் சந்தித்த ஜூடித், தம்மை மீட்டதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து ஜூடித் நன்றி தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது சுட்டுரைப்பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் "ஜூடித்தை பத்திரமாக மீட்டதற்காக ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply