பயோ எத்தனாலில் இயங்கும் வாகனங் களை தயாரிக்க ப.ஜா.ஜ், டி.வி.எஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார். குறிப்பாக கோதுமை வைக்கோல் போன்ற வற்றிலிருந்து தயாரிக்கப்படும் பயோ எத்தனால் மூலம் 100 சதவீதம் இயங்கும் வாகனங்களை உருவாக்க இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாகக் கூறினார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி மேலும் கூறியதாவது,

பயோ எத்தனாலில் இயங்கும் மோட்டார்சைக்கிள், ஆட்டோ ரிக்‌ஷாக்களை தயாரிக்க பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களுடன் பேசியுள்ளோம். 100 சதவீதம் பயோ எத்தனாலில் இயங்கும் வாகனங்களை உருவாக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அவர்களும் தயாரிக்க உள்ளனர்.

பயோ எரிபொருட்களை தயாரிக்கும் விதமான முயற்சிகளை விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி இருப்பதை குறைக்கமுடியும்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் வைக்கோல் வீணாக எரிக்கப்படுகிறது. இதன்மூலம் புதுடெல்லி பிராந்தியத்தில் காற்று மாசும் உருவாகிறது. ஒருடன் வைக்கோலில் இருந்து 280 லிட்டர் எத்தனால் உற்பத்தியாகும் என்றும் கூறினார்.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கு மரம் இறக்குமதி செய்யப் படுகிறது. ரூ.4,000 கோடிக்கு ஊதுபத்திக்கான குச்சிகளும், ரூ.35,000 கோடிக்கு காகிதகூழ், ரூ.35,000 கோடிக்கு காகிதமும் இறக்குமதி செய்யப்படுகிறது. மரம் சார்ந்தவற்றின் இறக்குமதி மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் மத்திய அரசு மூங்கில் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. இதனால் இறக்குமதியை குறைக்கலாம்.

முதல் முறையாக மூங்கிலை மரவகைகளில் வகைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

Leave a Reply