கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் சுமூகமாக இருக்கவேண்டும் என்றும், மாநிலத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகிறார்.

இதில் எந்தவித தவறும் இல்லை. அவர் எங்கும் எந்தஇடத்திலும் எந்த ஆணையையும் பிறப்பித்ததில்லை. ஆனால் அவரது செயல்பாடுகளை அரசியல் ஆக்கும் விதத்தில் திமுக. வினர் கருப்புகொடி காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தி.மு.க.வின் தகுதிக்கு தரக்குறைவானதாகும்.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடகட்சிகள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இனி இவர்களால் தமிழ்நாட்டில் வளர்ச்சிகாண முடியாது. அந்த கட்சிகளுக்கு இனி தமிழ் நாட்டில் எதிர் காலம் இல்லை.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை தமிழக மக்கள் முழுமையாக எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள். தங்கள் தேவைகளை பாஜக. முழுமையாக நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறார்கள். பாஜக.விற்கு தமிழ்நாட்டில் நல்லஎதிர் காலம் உள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஒருசாதாரண சுயேட்சை வேட்பாளரிடம் ஆளுகின்ற கட்சியும், ஆண்ட கட்சியும் தோற்று இருப்பது அந்தகட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. இடைதேர்தலில் ஒருசுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றது இதற்கு முன்பு நிகழ்ந்தது இல்லை.

நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தொடங்குகிறார்கள். ரஜினி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவாரா? என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது. யாரும் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி ஆரம்பிப்பதில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.

கர்நாடக மாநிலத்தில் நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சிக்கு வரும். ஏற்கனவே அங்கு பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் மக்களின் தேவைகளை நன்கு புரிந்துகொண்டுள்ளது. ஆகவே, காவிரி நீர்பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் சுமூகமாக தீர்வு காணப்படும்.

தமிழகத்தில் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானதுதான். காலத்தின் கட்டாயம். ஏனெனில் எரிபொருட்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அனைத்தும் உயர்ந்து விட்டன. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இருக்கவேண்டும். அதை விடுத்து ஒரேடியாக உயர்த்தி இருப்பது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவியரசு வைரமுத்து, ஆண்டாள் குறித்து கூறியிருப்பது சொந்தகருத்து இல்லை என்றும் வேறு ஒருவருடைய கருத்தை மேற்கோள் காட்டியிருப்பதாகவும் அதனால் யாருடைய மனமும் புண்படுத்தப் பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

மக்கள் அவரிடம் எதிர்பார்ப்பது வருத்தம் அல்ல, மன்னிப்பை தான். வருத்தத்திற்கும், மன்னிப்பிற்கும் நிறைய இடைவெளி உள்ளது.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

Tags:

Leave a Reply