நாகைமாவட்டம் சீர்காழியில் பாஜகவினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று காலை பாஜகவினர் கூடினர்.

அப்போது, அப்பகுதிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாஜகவினர் மீது கற்கள் மற்றும் பாஜக கொடிகள் கட்டப்பட்டிருந்த கம்பிகளைக் கொண்டு தாக்கத்தொடங்கினர். இதனால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளரான மயிலாடுதுறையைச் சேர்ந்த அந்தோணிசாமி மனைவி மாசிலாமேரி(35), அன்புச்செல்வன்(30), கனகசபை(62) உள்ளிட்ட 6 பேருக்கு தலை, கைகளில் காயம் ஏற்பட்டது.

தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதலில் ஈடுபட்டோரை கைதுசெய்ய வலியுறுத்தியும் பாஜகவினர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் வேலுகுணவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் காமராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட 21பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த அன்புச்செல்வன், கனகசபை ஆகிய இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாக்குதல், சாலை மறியல் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:

Leave a Reply