பாஜகவை பொருத்தவரை நேரடி அரசியலில்தான் இருக்கும், மறைமுக அரசியலில் ஈடுபடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தங்க தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் பதிலளித்தவர் இவ்வாறு கூறினார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையான தினகரன்மீது கடுமையான அதிருப்தியில் இருந்துவந்த தங்க.தமிழ்ச்செல்வன், கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தினகரன் குறித்து கடுமையான சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதனைத்தொடர்ந்து, பிரச்சனை பெரிதாக, அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்க தமிழ் செல்வன் விவகாரத்தில், பாஜக அரசியல் லாபம் பார்ப்பதாக கூறப்படுகிறது. அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி விலகிய நிலையில், தங்க தமிழ்ச் செல்வனும் அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறார். அமமுகவை ஆட்டம் காண வைக்க பல்வேறு முயற்சிகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், சென்னை தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் புதிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரஜினிகாந்த் முதல் தங்க தமிழ்ச்செல்வன் வரை, யாரையும் பா.ஜ.க. இயக்கவில்லை என்றார். மேலும், அமமுகவிலிருந்து தங்கத் தமிழ்ச்செல்வன் வெளியேறுவதற்கு பாஜக காரணம் அல்ல. தமிழகத்தில் எந்தக்கட்சியில் குழப்பம் நடந்தாலும் அதற்கு பாஜகவை காரணம் கூறுவது வேடிக்கையானது. அதேசமயம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டபரிசோதனைக்காக கையெழுத்திட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒருநிலைப்பாடா? என்றும் பேசினார்.

 

Comments are closed.