மத்திய பாஜக ஆட்சியின் 4 ஆண்டுசாதனை மலரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்றுவெளியிட்டார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அலுவல்களுக்காக நேற்று சென்னை வந்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள கனரகவாகன தொழிற்சாலை வளாகத்தில், 59 ஏக்கர் பரப்பளவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான சூரிய சக்தி மின்சார உற்பத்திஆலையை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் வாரிய உறுப்பினர் பி.கே.ஸ்ரீவஸ்தவா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தலைவரும், மேலாண் இயக்குநருமான வி.கவுதமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராம அஞ்சல் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமை அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் மாநில பாஜக தலைமை அலுவலகத்துக்குவந்த அவர், மத்திய பாஜக அரசின் 4 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் எடுத்தமுயற்சிகள் என்னென்ன என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்கும் வகையிலும், மக்களிடம் ஆதரவுகேட்டு தொடர்புகொள்ளும் விதமாகவும் “நோக்கம் சரியாக இருந்தால் முன்னேற்றம் சரியாக இருக்கும்” என்ற நூலை தயாரித் திருக்கிறோம். இந்த நூலை பத்திரிகையாளர்கள், முக்கியபிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து வழங்கி, விளக்க இருக்கிறோம். தமிழகத்தில் 1 லட்சம்பேரை சந்தித்து இதை வழங்கவுள்ளோம்.

ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம்செய்தால், அவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை. வழக்கம்போலவே தொழிலைசெய்யலாம். அப்படி இருக்கும்போது ஜிஎஸ்டி வரியால் சிறு, குறுதொழில்கள் பாதிக்கப்பட்டதாக எந்த வகையில் கூறப்பட்டது என்பது எனக்கு தெரியாது.

தூத்துக்குடியில் பலர் உயிரிழந்தது வேதனைஅளிக்கிறது. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலஅரசுடன் கலந்தாலோசித்துதான் நீட்தேர்வு செயல்படுத்தப் பட்டுள்ளது.

போர் விமானங்களை அதிகவிலை கொடுத்து வாங்கியதாக எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விவரத்தை வெளியிட அறிவுறுத்துகின்றனர். போர் விமானங்கள் வாங்கியதில் எந்த ஊழலும் நடைபெற வில்லை. தேச பாதுகாப்புக்காக அந்தவிவரங்களை வெளியிட முடியாது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Tags:

Leave a Reply