மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று, பாஜக எம்பிக்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் 150 கிமீ தூரம் பாதயாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி இன்று கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. அதில்பேசிய பிரதமர் மோடி,

”மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை வரும் அக்டோபர் 2ம் தேதி சிறப்பான முறையில் கொண்டாட இருக்கிறோம். இதன் ஒருகட்டமாக, மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் 150 கிமீ தூரம் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பாதயாத்திரை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி தொடங்கி சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும். இந்த பயணம் கிராமங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அமையவேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும்,”மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும், பாஜக பலவீனமாக உள்ள தொகுதிகளுக்கு சென்று அங்கு கட்சியை வலுப்படுத்தவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

நாம் தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவும்வகையில் பாத யாத்திரை அமையவேண்டும்” என்று பிரதமர் அறிவுரை வழங்கினார்.

Comments are closed.