இந்திய கிரிக்கெட்டில் ஏறக்குறைய சச்சினுக்கு இணையான ரசிகர்பலமும், புகழும் பெற்றவர் மகேந்திரசிங் தோனி. குறிப்பாக, ஜார்க்கண்ட் மைந்தனாக தோனி இருந்தாலும், ஐபிஎல் தொடர் மூலம் தென்னிந்தியாவில் மிகப் பெரிய ரசிகர்படையை தோனி வைத்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபிறகு, தமிழகத்தில் ‘தல’ என்று அழைக்கப்படும் அளவிற்கு செல்வாக்குபெற்றார். இந்த செல்வாக்கை தற்போது பாஜக கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கம்பீர் மற்றும் தோனி ஆகிய இருவரையும் தங்கள் சார்பில் தேர்தலில்களமிறக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த இரண்டு நாட்களாகவே செய்திகள் வெளியாகிவருகிறது. கம்பீரை டெல்லியிலும், தோனியை ஜார்கண்ட்டிலும் களமிறக்க பாஜக காய்கள் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்  ஒருவர் கூறுகையில், “கிரிக்கெட்வீரர் கம்பீரை வேட்பாளராக அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. அதற்கு அவரின் சமூகசேவையே காரணம். டெல்லி மக்களும் கம்பீர் மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர்” என்றார்.

அதேசமயம் தோனியை பொறுத்த வரை தென்னிந்தியாவில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை முழுதாக பயன்படுத்த பாஜக விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் தோனியை களமிறக்கும் பட்சத்தில் பாஜகவுக்கு ஆதாயம் இருக்கும் என மேலிடம்கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அமித்ஷா தோனியை சந்தித்து பாஜகவின் சாதனைவிளக்க அறிக்கையை அளித்திருந்தார். அப்போதே இதற்கான அடிக்கல் போடப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. கல்விட்டெறிந்து பார்ப்போம் என்கிற ரீதியில் பாஜக இந்த யோசனையில் இருப்பதாக தெரிகிறது.

தோனி தரப்பில் இதுகுறித்து கூறுகையில்  எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், அடுத்தவருடம் நடக்கவுள்ள உலகக் கோப்பைத் தொடர்மீதே தோனியின் கவனம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply