பாஜக.,வினரின் அகந்தை குணத்தையும், தவறான நடத்தையையும் பொறுத்துக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பாழடைந்த கட்டடம் ஒன்றை இடிக்கச்சென்ற நகராட்சி அதிகாரியை பாஜக எம்எல்ஏ, கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன்  ஆகாஷ் விஜய்வர்கியா கடந்த வாரம் கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். நகராட்சி அதிகாரி தாக்கப்படும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி தெரிவித்ததாகக் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

ஒருசில நபர்களால் கட்சிக்குக் களங்கம் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் யாராக இருந்தாலும், யாருடைய மகனாக இருந்தாலும் அகந்தை குணத்தையும், தவறான நடத்தையையும் பொறுத்துக் கொள்ள முடியாது.

பாஜக தலைவர்கள் அனைவரும் கடும்பாடுபட்டு கட்சிக்கு வெற்றி தேடித்தருகின்றனர். ஆனால், ஒருசிலர் தங்களது நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப் பெயர் விளைவிக்கின்றனர். மனம்போன போக்கில் சிலர் செயல்படக்கூடாது. கட்சியைச் சேர்ந்த சிலர் தவறுசெய்தால், உடனே மன்னிப்பு கேட்டாக வேண்டும்.

இதுபோன்ற செயல்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி எச்சரித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தக் கூட்டத்தின் போது, பிரதமர் மோடி எந்தச் சம்பவத்தையும் குறிப்பிடாதபோதிலும், ஆகாஷ் வர்கியாவைக் குறிப்பிட்டு பேசியதாகவே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவும் பங்கேற்றார்.

முன்னதாக, கூட்டத்தின் தொடக்கத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத்தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.