கேரளாவில் 4 பாதிரியார்களுக்கு எதிரான பாலியல்பலாத்கார வழக்கில் பாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று  கைது செய்யப் பட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட 2-வது பாதிரியார் இவர் ஆவார்.

கேரளாவின் கோட்டயம் பகுதியில் மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன் தேவாலயம் உள்ளது. பாவ மன்னிப்பு கேட்ட பெண் ஒருவரை மிரட்டி, 5 பாதிரியார்கள் நீண்டகாலமாக பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக புகார் எழுந்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அப்பெண்ணின் வாக்குமூலத்தை தொடர்ந்து, 4 பாதிரியார்களுக்கு எதிராக கேரளபோலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த 4 பாதிரியார்களில் மூவரின் முன்ஜாமீன் மனுவை கேரளநீதிமன்றம் கடந்த புதன்கிழமை நிராகரித்தது. இதையடுத்து இவர்களில் பாதிரியார் ஜாப் மேத்யூ என்பவர் போலீஸாரிடம் நேற்றுமுன்தினம் சரணடைந்தார். பின்னர் இவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜான்சன் வி. மேத்யூ என்ற பாதிரியாரை திருவல்லா அருகே ஒருவீட்டில் போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

“இவர்மீது  பாலியல் பலாத்கார வழக்கு  பதிவு செய்யப்படவில்லை. ஆனால் மானபங்க வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது”  என போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தவழக்கில் ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜேஸ் கே.ஜார்ஜ் ஆகிய 2 பாதிரியார்கள் தொடர்ந்து தலை மறைவாக உள்ளனர். இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply