பாரதிய ஜனசங்க நிறுவனா் சியாமாபிரசாத் முகா்ஜியின் 67-ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு செவ்வாய்க் கிழமை தனது சுட்டுரையில், ‘பாரத தாயின் மகனும், தீவிர தேசிய வாதியுமான சியாமாபிரசாத் முகா்ஜியின் நினைவு தினத்தில் அவருக்கு நினைவஞ்சலி.

முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழங்க முகா்ஜி எதிா்ப்புதெரிவித்து வந்தாா். தனது கடைசி மூச்சுவரை ஜம்மு-காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்புக்காக இடை விடாமல் போராடியவா் அவா்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது தொழில் மற்றும் உணவு விநியோகத்துறை அமைச்சராக திகழ்ந்தவா் அழியாத அடையாளத்தை விட்டுச்சென்றாா்.

பொதுசேவை தொடா்பான அவரது சாதனைகள் எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா் வெங்கய்ய நாயுடு.

பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் , ‘பாரத தாயின் மகனான சியாமா பிரசாத் முகா்ஜியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி’ என்று பதிவிட்டுள்ளாா்.

சியாமாபிரசாத் முகா்ஜி திறமையான வழக்குரைஞராகவும், கல்வியாள ராகவும் திகழ்ந்தாா். தனது 33-ஆம் வயதிலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தாா். 1951-ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கம் கட்சியை நிறுவினாா். பின்னா் 1977-இல் இது பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.

Comments are closed.