பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை கூடுகிறது. கூட்டத்தில் 25–ந் தேதி (வியாழக்கிழமை) ரெயில்வேபட்ஜெட்டை ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார்.

29–ந் தேதி (திங்கட் கிழமை) 2016–2017ம் ஆண்டுக்கான மத்தியபட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதிமந்திரி அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அப்போது பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 26–ந் தேதி (வெள்ளிக் கிழமை) பொருளாதார ஆய்வு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது.

இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால் நாளை பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார். அப்போது மத்திய அரசின் புதியதிட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

பாராளு மன்றத்துக்கு உரை நிகழ்த்த வரும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பாரம்பரிய முறைப்படி அழைத்து வரப்படுகிறார். பாராளுமன்றத்தின் வாயலில் அவரை பிரதமர் மோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்கிறார்கள்.

Leave a Reply