பாலாறு பிரச்சனை, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தல் நடந்த முறைகேடு, மாணவர்களுக்கான கல்விக்கடன் பிரச்சனை உள்ளிட்டவைகளை தீர்க்குமாறு பிரதமர் மோடியை தருமபுரி எம்பியும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ்  புதன் கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
 
அப்போது பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை  ஆந்திரஅரசு தன்னிச்சையாகவும், சட்ட விரோதமாகவும்  உயர்த்திவருவதையும், பாலாற்றின் துணை ஆறுகளின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்டிவருவதையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
 
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின் போது தமிழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும்,  வாக்காளர்களுக்கு  ஓட்டுக்கு ரூ.500 முதல் 5000 வரை வழங்கப்பட்டதையும் பிரதமரிடம் அன்புமணி இராமதாஸ் எடுத்துக் கூறினார். '' தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும்  கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு தடைவிதிக்கப்பட வேண்டும். தேர்தல்பணிகளில் முழுக்க முழுக்க வெளிமாநில அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கருத்துக்கணிப்புகளுக்கு  தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இதுகுறித்து ஆய்வுசெய்து அரசுக்கு பரிந்துரை செய்ய தேர்தல் சீர்திருத்தங்களுக்காக தனி நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்க வேண்டும்" என்றும் பிரதமரிடம் அன்புமணி இராமதாஸ் கோரினார்.

Leave a Reply