சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களில் பாரதிய ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம் கேரளாவில் பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக மூத்த தலைவர்கள் கருத்துதெரிவித்தனர். எனவே பிரதமர் மோடியை கேரளா அழைத்து வந்து பாஜக கூட்டங்களில் பங்கேற்க திட்டமிடப்பட்டது.

அதன்படி சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் நாளை பாஜகவின் மாநாடு நடைபெறுவதாக இருந்தது, இதில் பிரதமர் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சபரிமலை போராட்டம் வலுத்துள்ளதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே பணிகள்முடிந்து திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கொல்லம் புறவழிச்சாலையை வருகிற 15-ந் தேதி பிரதமர் மோடி திறந்துவைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அவர் 15-ந் தேதி கேரளா வருகிறார். அவருடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் வருகிறார்.

அன்று கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். தொடர்ந்து 27-ந் தேதி திருச்சூரில் பாரதிய ஜனதா இளைஞர் அணியினரின் பேரணி நடக்கிறது. இதிலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என கூறப்படுகிறது.

மேலும் கேரளாவில் தற்போது நடந்துவரும் சபரிமலை விவகாரத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்து போராட்டங்களை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

வருகிற 18-ந்தேதி இதற்காக பேரணி மற்றும் தர்ணா போன்ற போராட்டங்கள் நடத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டங்களுக்கு கட்சியின் மேலிட தலைவர்களை பங்கேற்க அழைத்துள்ளனர்.

Leave a Reply