பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் தொடங்கிவைக்கவுள்ள திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவிடத்தை திறக்க பிரதமர் நரேந்திரமோடி ஜூலை 27-ல் ராமேசுவரம் வருகிறார். இந்நிலையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் மேடை மூன்றாவது முறையாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

முன்னதாக பேக்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்துக்கு எதிரே விழாமேடை அமைக்கப்பட்டது. ஆனால் அது ரயில்வே நிலையத்துக்கு அருகே என்பதால் பாதுகாப்புகருதி அந்த இடம் மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மண்டபம் பகுதியில் ஹெலிபேட் அமைக்கப்பட்ட இடத்திற்கு அருகே மேடை அமைக்கப்பட்டது.
 
ஆனால் தற்போது மண்டபத்தில் உள்ள கடற்படைஅதிகாரிகள் குடியிருப்பில் விழாமேடை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் முதலில் போடப்பட்ட மேடைபிரிக்கப்பட்டு, கடற்படை அதிகாரிகளின் குடியிருப்பு பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்டிஓ அதிகாரிகள் கலாம்மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக கூறினர். மேலும் பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் திட்டங்களையும் அவர்கள் பட்டியலிட்டனர்.
 
அதாவது வரும் 27ஆம் தேதி ராமேஸ்வரம் வரும் பிரதமர்மோடி பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தை திறந்துவைக்கிறார். இதைத்தொடர்ந்து அவரது நினைவு மண்டபத்தில் உள்ள கலாமின் ஓவியங்கள் மற்றும் போட்டோக்களை பிரதமர் பார்வையிடுகிறார்.
 
ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தையும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். மேலும் ரமேஸ்வரத்தில் இருந்து அயோத்யா வரையிலான ரயில்சேவையையும் தொடங்கி வைக்கவுள்ளார்.
 
அப்துல் கலாமின் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அவரால் எழுதப்பட்ட புத்தகங்களைகொண்ட பேருந்து சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். அந்த பேருந்து ராமேஸ்வரத்தில் பலநகரங்கள் மற்றும் மாநிலங்களை கடந்த டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் தனது பயணத்தை நிறைவுசெய்யும்.

Leave a Reply