பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி 5 நாட்களில் 10 மாநிலங்களில் மக்களவை தேர்தல்பிரசாரத்தை மேற்கொள்கிறார். ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாஜ, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடக்கியுள்ளனர். மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பாஜவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றார். முதல் கட்டமாக 5 நாட்களுக்குள் 10 மாநிலங்களில் பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் பிரதமர் மோடியின் பயணதிட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று சட்டீஸ்கர், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 3 மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்செய்கிறார். சட்டீஸ்கரில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தோல்வியை தழுவி ஆட்சியை காங்கிரசிடம் இழந்தது. இதனைதொடர்ந்து முதல் முறையாக சட்டீஸ்கர் செல்லும் பிரதமர் அங்குநடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து மேற்குவங்கத்தில் பிரதமர் பிரசாரம் செய்கிறார். மாநிலத்தில் பாஜ, திரிணாமுல் காங்கிரஸ் இடையே பல்வேறு மோதல்கள் நடந்துவரும் நிலையில் பிரதமர் மோடி அங்கு செல்கிறார். தொடர்ந்து பாஜ தலைவர்கள் அங்கு குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தி பேசிவருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அசாம் செல்லும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அங்கேயே தங்குகிறார். 9ம் தேதி அசாமில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி வழங்குகிறார். பின்னர் அருணாச்சலப் பிரதேசம் செல்லும் அவர் பசுமை விமான நிலையத்துக்காக அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் திரிபுரா சென்று பாஜவுக்கு ஆதரவு திரட்டுகிறார். 10ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். திருப்பூரில் நடக்கும் கட்சியின் பிரசாரகூட்டத்தில் கலந்து கொள்கிறார். முன்னதாக பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் அங்கிருந்தபடியே சென்னை மெட்ரோ முதல் திட்டபணியின் நிறைவான வண்ணாரப்பேட்டை வரையிலான ரயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி ைவக்கிறார்.

தொடர்ந்து கர்நாடகாவின் ஹப்பள்ளி மற்றும் ஆந்திராவின் குண்டூரில் நடக்கும் தேர்தல்பிரசார கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார். பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார். 11ம் தேதி டெல்லியில் இருந்து பிரதமர் மோடி உத்தரப்பிரதேசம் செல்கிறார். மதுரா கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அட்சயப்பாத்திரம் அறக்கட்டளை சார்பாக நாடுமுழுவதும் நாள்தோறும் 18 லட்சம் சிறுவர் சிறுமியர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தபின் டெல்லி திரும்புகிறார். 12ம் தேதி அரியானாவில் தனது தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். பின்னர் அங்கு நடக்கும் பெண்பஞ்சாயத்து தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து கிராம பஞ்சாயத்து பெண் தலைவிகள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply