ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1ஆவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி44 ராக்கெட் நேற்று இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்தராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த 690 கிலோ எடைகொண்ட ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கைகோள், ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து மிகச்சிறிய அளவில் 34 கிராம் எடையில் தயாரித்துள்ள ‘கலாம் சாட்’ என்ற செயற்கை கோள் ஆகியவற்றை சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது.

பூமியில் இருந்து 274.12 கிமீ தூரத்தில் உள்ள புவிவட்டப் பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோளும், 450 கிமீ தூரத்தில் ‘கலாம் சாட்’ செயற்கைகோளும் நிலைநிறுத்தப் பட்டன. ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கைகோள் பூமியை கண்காணிக்கவும், ‘கலாம் சாட்’ செயற்கைகோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும் பயன்படுத்தப் படவுள்ளது.

பிஎஸ்எல்வி மூலம் 2019ஆம் ஆண்டில் முதல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளதாகவும், இந்த வருடம் 32 ராக்கெட்களை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி டுவிட்டரில்,”பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திறமை வாய்ந்த இந்திய மாணவர்களின் கலாம்-சாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புவி சுற்றுவட்டப் பாதையில் 4ஆவது நிலையை பயன்படுத்தி செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply