சமீபத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, லாலுபிரசாத்தின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வியுடன் இணைந்து ஆட்சியை செயல்படுத்த விரும்பாததால், பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார், நேற்று ராஜினாமா செய்தார். பா.ஜ., ஆதரவுடன் இன்று காலை மீண்டும் முதல்வராக பதவியேற்றுகொண்டார்.

துணை முதல்வர் தேஜஸ்வி வீட்டில் ஊழல் புகார்காரணமாக சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில், தேஜஸ்வியை நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்துவதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையில், 'தேஜஸ்வி துணைமுதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யமாட்டார்' என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார். கருத்து வேறுபாடுகள் முற்றியிருந்த நிலையில், திடீரென பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.


இந்நிலையில், பி.ஜே.பி ஆதரவுடன் தற்போது நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். மேலும், பீகார் மாநில பி.ஜே.பி தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இருவருக்கும் ஆளுநர் திரிபாதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

Leave a Reply