பாஜகவின் தேசியத்தலைவராகப் பொறுப்பேற்று புதன் கிழமையுடன் 3 ஆண்டுகளை அமித்ஷா நிறைவு செய்கிறார்.கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சிக்குவருவதற்கு முன், அக்கட்சி இருந்த நிலைமையை அமித் ஷாவும், பிரதமர் மோடியும் தற்போது மாற்றியுள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரைகளும், அமித் ஷாவின் நிர்வாகத் திறமையும் பாஜகவை மொத்தம் 13 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், 5 மாநிலங்களில் கூட்டணிகட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது நினைவுகூரத்தக்கது.
ஆகமொத்தம் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சிபுரிந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் 73 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.


அமித் ஷாவின் சிறந்த நிர்வாகப்பணி காரணமாக, அஸ்ஸாம், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து முதல் முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அமித் ஷாவின் கட்சிப்பணிகள் குறித்து பாஜகவினர் கூறியதாவது:நாடுமுழுவதும் கட்சியை விரிவுப்படுத்தியவர் அமித் ஷா.
பாஜக நிறுவனர்களான ஷியாம பிரசாத் முகர்ஜி, தீன தயாள் உபாத்யாய் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி அமித் ஷா கட்சிப் பணியாற்றி வருகிறார்.


பெண் குழந்தை கல்வித் திட்டம், தூய்மை கங்கை திட்டம், பயிர்க்காப்பீடு திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கட்சியினருக்கு அமித் ஷா வலியுறுத்தி வந்தார். இதன்காரணமாக, இந்தத் திட்டங்கள் அனைத்து தரப்புமக்களிடம் சென்று சேர்ந்தது.


ஒடிஸா, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் பலத்தை அதிகரிப்பதற்கான பல்வேறுபணிகளில் அமித் ஷா கவனம் செலுத்தி வருகிறார்.கடந்த 3 ஆண்டுகளும் தினமும் 541 கி.மீ. தொலைவுக்கு கட்சிக்காகப் பயணம் செய்து பணியாற்றியவர் அமித் ஷா. அவரது சிறப்பான பணி 4-ஆவது ஆண்டிலும் தொடரும் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.

Leave a Reply