நாடு முழுவதும், பிற்பட்ட, 115 மாவட்டங்களை வளர்ச்சியடையச் செய்யும்நோக்கில், பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கிய, 'புதிய இந்தியா' திட்டத்தை நிறைவேற்றும் பணியில், மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், இந்த திட்டத்தில் பயனடைய உள்ளன.

நாடுமுழுவதும், மிகவும் பிற்பட்ட மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை, பிற மாவட்டங்களுக்கு நிகராக வளர்ச்சிடைய செய்ய, பிரதமர் மோடி, 'புதிய இந்தியா' என்ற பெயரில் திட்டம் வகுத்துள்ளார்.

 

இத்திட்டத்தை, 2022க்குள் நிறைவேற்ற, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன்படி நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 115 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த விருதுநகர்,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

பீஹாரில், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள, ஒன்பது; தெலுங்கானாவில், ஒன்று; மஹாராஷ்டிராவில், ஒன்று; ஆந்திராவில், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் சிலமாவட்டங்கள், 'புதிய இந்தியா' திட்டத்தில் பயனடைய உள்ளன.

மாவட்டங்களை வளர்ச்சிஅடையச் செய்யும், 'புதிய இந்தியா' திட்டத்தின் பொறுப்பாளர்களாக, மூத்த, ஐஏஎஸ்., அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதல் அல்லது இணைசெயலர் அந்தஸ்து அதிகாரிகள்,மாவட்டங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையிலான நடவடிக்கைகளுக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில், பாலமாக செயல்படுவர்.

இதுகுறித்து, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:பிற்பட்ட மாவட்டங்களை, பிறமாவட்டங்களுக்கு நிகராக வளர்ச்சியடைய செய்யும்நோக்கில், மத்திய அரசு, 'புதிய இந்தியா' திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற, மூத்த, ஐஏஎஸ்., அதிகாரிகள் பணியில் அமர்த்தப் படுவர். மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் நடக்கும் இத்திட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட குழுக்களை, மூத்த அதிகாரிகள் ஒருங்கிணைப்பர்.
 

 

இத்திட்டம் தொடர்பாக, விரிவான தகவல் களஞ்சியம் உருவாக்கவும், நிறைவேற்றப்படும் பணிகள், செய்யப்பட வேண்டிய வேலைகள் குறித்த தகவல்களை திரட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.ஒருபகுதியில் காணப்படும் வறுமை, சுகாதாரம், கல்வி,கட்டமைப்பு வசதிகள் போன்ற வற்றை கருத்தில் வைத்து, பிற்பட்ட மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'நிடி ஆயோக்' தலைவர் கடிதம் 'புதிய இந்தியா' திட்டம்தொடர்பாக, மத்திய அரசின் திட்டங்கள் உருவாக்கல் அமைப்பான, 'நிடி ஆயோக்' தலைவர்,அமிதாப் காந்த், சமீபத்தில், அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், 'புதிய இந்தியா திட்டத்தை நிறைவேற்ற நியமிக்கப்படும் மூத்த அதிகாரிகள்,மத்திய அரசுக்கும், பிற்பட்ட மாவட்ட நிர்வாகத்துக்கும் இடையே, பாலமாக செயல்படவேண்டும்' என, வலியுறுத்தி இருந்தார்.

மேலும், 'இந்திய பொருளாதாரம், வேகமான வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், சிலபகுதிகள், போதியவளர்ச்சி அடையாமல் உள்ளன. இதனால், பெரியளவில், நிர்வாக ரீதியிலான சவால் ஏற்படுகிறது. இந்த பகுதிகளை, பிறபகுதிகளுக்கு நிகராக வளர்ச்சி அடையசெய்ய வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது' என, அவர் கூறியிருந்தார்.

 

ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தபடும் திட்டங்களை கண்காணிக்க, தனியே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், விருதுநகர் மாவட்டத்திற்கு, பிரவீன் குமார்; ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, கோபால கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply