‘பகீரத பிரயத்தனம்’ என்ற வார்த்தையை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. நம்மால் செய்ய முடியாத காரியத்திற்காக முயலும்போது அதை பகீரத பிரயத்தனம் என்று சொல்வார்கள்.

ராமபிரானின் முன்னோர்களில் ஒருவனான பகீரதன், தன் முன்னோர்கள் நற்கதியடைய சொர்க்க லோகத்தில் உள்ள கங்கையை பூமிக்கு கொண்டுவர நினைத்தான். பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்து, அதன் பலனாய் கங்கை பூமிக்கு வந்தது. பகீரதன் தன் தேரில் முன் செல்ல, அவனை பின் தொடர்ந்தது கங்கை. அதுவே அதன் வழித்தடமானது.

இன்று அப்படிப்பட்ட ஒரு சரித்திர சாதனைக்காக தமிழகம் காத்திருக்கிறது. ‘ரஜினிகாந்த் என்ற பகீரதனால் மட்டுமே அது சாத்தியமாகும்’ என்பதை உலகம் உணரத்தொடங்கியுள்ளது. இது ஏதோ தேர்தலுக்காக பேசப்படும் பசப்பு வார்த்தைகளல்ல. பல வருடங்களுக்கு முன்னரே ரஜினி நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ‘பகீரத யோஜனா’ என்று பெயரிட்டு, அதை மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் தெரிவித்ததும், அவர் இந்த முயற்சியை பாராட்டியதையும், நதிநீர் இணைப்பு ‘தனது கனவுத் திட்டம்’ என்று சொன்னதையும் நாமெல்லாம் அறிவோம்.

அந்த முயற்சி அதோடு தூங்கிப்போனது. ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. தற்போது மீண்டும் அதை தட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ரஜினி. அவரது கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அவசியத்தையும் உணர்ந்த பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்புத் திட்டத்தை சேர்த்துள்ளது. இது ரஜினியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அதே நேரத்தில் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து செயல்பட்ட பாஜகவையும் இந்த தருணத்தில் பாராட்டுவது அவசியம்.

நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமா, சாத்தியமில்லையா என்று ஆராய்ந்து முடிவெடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், தொடக்கத்திலேயே அதை நிராகரித்தது கங்கிரஸ். இது தொடர்பான ஒரு கேள்விக்கு ‘நதிநீர் இணைப்பு சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை ஏற்படுத்தும். அதனால் நாங்கள் இந்த திட்டத்தை எதிர்க்கிறோம்’ என்று பதிலளித்தார் ராகுல் காந்தி. அதே போல தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, ‘ஒரே மாநிலத்தில் ஓடும் நதிகளை மட்டுமே இணைக்க முடியும். காவிரி நீரை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கே பல்வேறு அரசியல் பிரச்னைகள் இருக்கிற சூழ்நிலையில், பல்வேறு மாநில நதிகளை இணைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. இதைப்பற்றி எல்லாம் தெரிந்துதான் ரஜினி ஆதரவு அளித்தாரா? அல்லது தெரியாமல் ஆதரவு அளித்தாரா என்பது எனக்கு தெரியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

ஒன்று புரிகிறது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் குழிதோண்டி அடக்கம் செய்யப்படும் என்பதை ராகுல் காந்தியின் பதில் நமக்கு புரியவைத்துள்ளது. அதுமட்டுமல்ல, காங்கிரஸின் இந்த எதிர்மறையான சிந்தனையே இத்தனை காலம் நதிநீர் இணைப்பு என்ற கனவை கனவாகவே வைத்திருப்பதும் நமக்கு புரிகிறது.

நதிநீர் இணைப்பு என்பது ரஜினிக்கு இன்று தோன்றிய கருத்தல்ல. 2002ம் ஆண்டு, காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி. அப்போது, நதிநீர் இணைப்பிற்காக ஒரு கோடி ரூபாய் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

‘அந்த பணத்தை ரஜினி டெபாஸிட் செய்திருக்கிறார்’ என்ற ரகசியத்தை 2017ம் ஆண்டு ஒரு பேட்டியில் அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்தார்.

‘தென்னிந்திய நதிகளை இணைச்ச அடுத்த நாளே கண்களை மூடினாலும் பரவாயில்லை’ என்று ஒரு கூட்டத்தில் ரஜினி உருக்கமாக பேசியது நம் நினைவிற்கு வருகிறது. ‘என்னுடைய வாழ்க்கையின் ஒரே கனவு நதிகள் இணைப்பு’ என்று தன்னை சந்திக்க வருபவர்களிடமெல்லாம் அவர் சொல்வதும் வழக்கம்.

ஜூன் 18, 2017 அன்று பதினாறு விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தனர். அவர்களிடம் நதிநீர் இணைப்பு தொடர்பாக தனது ஆதரவை தெரிவித்தார் ரஜினி. ‘முதலில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, காவிரி ஆகியவற்றை இணைப்பதற்கான முயற்சியில் இருக்கிறேன்’ என்று ரஜினி தெரிவித்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், ‘முன்பு தருவதாக சொன்ன பணத்தை பிரதமர் மோடியிடம் கொடுத்து இந்த நல்ல காரியத்திற்கு பிள்ளையார் சுழி போடுங்கள்’ என்றும் அவர்கள் ரஜினியிடம் கேட்டுக்கொண்டனர்.

இவையெல்லாம் நதிநீர் இணைப்பில் ரஜினி எடுத்துக்கொண்ட அக்கறையையும், முயற்சியையும் தெரிந்து கொள்வதற்கான சில நிகழ்வுகள்.

பிப்ரவரி 17, 2019 அன்றே ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை தீர்த்துவைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு சிந்தித்து, ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்ற சொல்லியிருந்தார்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ‘தண்ணீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கே ஆதரவு’ என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது தேர்தல் அறிக்கையில் நதி நீர் இணைப்பை இடம்பெறச் செய்துள்ளது பாஜக. இது ரஜினி அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மட்டுமல்ல, தேச நலனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்.

கட்டுக்கட்டாக லாரியில் பணம், பேருந்தில் பணம், கார் கதவுகளில் பணம் என்று தேர்தல் பண விளையாட்டுகள் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களில் முதன்மை இடம் பெற்றுள்ளது  தமிழகம். பிடிபட்டவுடன் ‘பணம் தன்னுடயதல்ல’ என்று சொல்லிவிட்டு, அமைதியாக தேர்தல் பணியை பார்க்கும் சிலரையும் பார்க்க முடிகிறது. நியாயமாகச் சம்பாதித்த எவரும் இப்படி சொல்லமாட்டார்கள். கடந்த தேர்தலில் ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஏன், இறந்த உடலோடு பணம் கடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். முதலில் தமிழகத்தில் பரவிக்கிடந்த பண விநியோக ஃபார்முலாக்கள், இன்று பல மாநிலங்களையும் சென்றடைந்துவிட்டது. தமிழன் இந்த விஷயத்தில் உலகத்திற்கு முன்னோடி என்றுகூட சொல்லலாம். சமீபத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்திற்குள் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் ஒரு கட்சியின் சார்பாக தேர்தல் செலவிற்காக சென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ தெரியவில்லை. சொல்ல வந்த விஷயம் ரொம்ப எளிது, இவ்வளவு பணத்தை வாரி இரைக்கும் அரசியல்வாதிகள், நதிநீர் இணைப்பிற்கு நன்கொடையாக ஒரு சிறு துரும்பையாவது கொடுத்தார்களா? பல ஆயிரம் கோடிகளை கட்சி நிதியாக வைத்துக்கொண்டுள்ள கட்சிகள் சில கோடிகளை நதிநீர் இணைப்பிற்கு கொடுப்பதாக அறிவித்தால் போதும், ஓட்டுகள் தானாக விழும். அதன்பிறகு, இப்படி தேவையில்லாமல், ஒவ்வொரு வீடாகச் சென்று கள்ளத்தனமாக பணத்தை கொடுக்க வேண்டிய அவசிமில்லை. பிடிபட்ட பணம் என்னுடையதல்ல என்று சொல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.

ரஜினிக்கும், அவரது கருத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கட்சிக்கு அவரது ரசிகர்களும், அவரின் மீது அன்பு கொண்டவர்களும் ஆதரவளிப்பதில் தவறேதும் இல்லை. குறிப்பிட்ட ஒருவரை ஆதரியுங்கள் என்று அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இருந்தாலும், நாம் விரும்பும் ஒருவருக்கு முக்கியத்துவமும், அவரின் யோசனையை செயல்படுத்தத் தயாராக இருப்பவரை ஆதரிப்பதில் தவறில்லையே!

‘விவசாயிகளுக்கு, நிரந்தரமாக பாசனத்துக்கு நீர் தரும் வகையில், 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தேர்தலில் வெற்றிபெற்றதும், லோக்சபாவில் அதிமுகவின் முதல் குரல் இந்த திட்டத்தை வலியுறுத்தித்தான் இருக்கும். இதன்மூலம், காவிரி வற்றாத நதியாக மாறும், தமிழகத்தில் விவசாயம் தழைக்கும்’ என்று பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் உறுதியளித்துள்ளது ரஜினியின் கருத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆனால், ஸ்டாலின் கருத்து எதிர் திசையில் பயணிக்கிறது. ‘பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நடிகர் ரஜினிகாந்திற்கு மட்டும்தான் புரியும். பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி ஆதரிக்கத் தவறியிருந்தால்தான் ஆச்சரியம்’ என்று பேசியிருக்கிறார்.

மிஸ்டர் ஸ்டாலின் அவர்களே! ஒரு நல்ல விஷயத்தை ஆதரிப்பதில் என்ன தவறு? இதற்காக ரஜினியின் புரிதலை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள். புரிதல் என்பது அவரவர் மனமுதிர்ச்சியைப் பொறுத்தது. அவருக்கு எப்படி புரிந்தது என்று கேள்வி கேட்பதைவிட, எனக்கு புரியவில்லை என்று சொல்லிவிடுவது உத்தமம். புரிதல், புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டிய நேரத்தில் சரியாகப் புரியும். புரிதலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக வருகிறது இந்தக் குட்டிக்கதை.

சாது ஒருவர் கடுமையான தவம் செய்தார். கடவுள் அவர் முன் தோன்றினார்.

‘கடவுளே! நாளை நடப்பதை இன்றே தெரிந்துகொள்ளும் வரத்தை எனக்கு அளியுங்கள்’ என்று வேண்டினார்.

‘சாதுவே! உன்னுடைய தவம் என்னை மகிழ்வித்தது. நீ கேட்ட வரத்தை கொடுக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நாளை நடப்பதை நீ தெரிந்துகொள்ளலாம். ஆனால், அதை வெளியில் சொன்னால் உன் தலை வெடித்துச் சிதறிவிடும்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.

‘எனக்கு தெரிந்ததை அடுத்தவருக்குச் சொல்ல முடியாவிட்டால், அந்த வரத்தால் என்ன பயன்’ என்று வருத்தப்பட்டார். வழக்கமாக அரண்மனைக்குச் சென்று அரசனோடு பேசிக்கொண்டிருக்கும் சாது, இந்த வரத்திற்குப் பிறகு அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

ஒரு நாள், அரசன் குதிரையில் நகர்வலம் வந்து கொண்டிருந்தான். வழியில் நடுத்தெருவில் சாது அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி நாய்கள் நின்றுகொண்டிருந்தன. நாய்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்தார் சாது. அரசனுக்கு ஆச்சரியம்.

‘என்ன சாதுவே இப்படி நடுத்தெருவில் உட்கார்ந்திருக்கிறீர்களே! ஏதாவது விஷேசமா?’ என்று கேட்டார்.

‘அரசே! தெரிஞ்சதை புரிஞ்சதை சொல்ல முடியல; தெரியாததை புரியாததை சொல்ல விரும்பல; அறிஞ்சதை புரிஞ்சவன் புத்திசாலி; புரிஞ்சதை அறிஞ்சவன் அதிபுத்திசாலி’ என்று சொல்லிவிட்டு அமைதியானார் சாது.

எதுவும் சொல்லாமல் நகர்ந்தான் அரசன். அரண்மனை திரும்பிய அரசன், காவலர்களை அழைத்தான். சாது அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி பதுங்கியிருக்கும்படி ஆணையிட்டான். அன்று இரவு திருடர் கூட்டம் ஒன்று நகருக்குள் நுழைந்தது. அவர்களை, பதுங்கியிருந்த காவலர்கள் பிடித்தனர். நடந்தது எதுவும் மக்களுக்கு புரியவில்லை, காவலர்களுக்கும் புரியவில்லை, திருடர்களுக்குக்கூட புரியவில்லை.

சில நாட்களுக்குப் பின் அரசன் நகர்வலம் சென்றான். புதர்களுக்கு மத்தியில் தலைக்கடியில் ஒரு குடத்தை வைத்து படுத்திருந்தார் சாது. பதிலேதும் பேசாமல் சென்றுவிட்டார் அரசர். அடுத்த நாள் கடப்பாரை மண்வெட்டியோடு ஒரு கூட்டம் வந்தது. சாது படுத்திருந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். ஊற்று நீர் குபுகுபுவென்று வந்தது. எல்லோருக்கும் மகிழ்ச்சி. இப்படியாக நாட்டில் பல அதிசயங்கள் நடந்தன.

நடப்பது ஏதும் அரசியாருக்குப் புரியவில்லை. நேராகச் சென்று அரசனை சந்தித்தார்.

‘அரசே! நம்மைச் சுற்றி பல நல்ல விஷயங்கள் நடக்கின்றன. தீமையான விஷயங்கள் சரியான நேரத்தில் தடுக்கப்படுகின்றன. இவையெல்லாம் எப்படி நடக்கிறது? சாது ஏதோ சொல்கிறாரே அதன் அர்த்தம் என்ன?’ என்று கேட்டார் அரசி.

‘அரசியே! திடீரென்று கடவுள் ஒருநாள் என் கனவில் தோன்றினார். ‘அரசனே! நடப்பவற்றையெல்லாம் முன்னரே அறியும் வரத்தை சாதுவிற்கு வழங்கியிருக்கிறேன். சாது நல்லவர். சூதுவாது தெரியாதவர். அதனால் பலமுறை அவரை பலர் தங்கள் சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். என்னுடைய வரமும் அப்படி தவறானவர்களுக்கு சென்றுவிடக் கூடாது. அதனால், ‘நடப்பதை முன்னரே தெரிந்துகொள்ளலாம். ஆனால், அதை வெளியில் சொன்னால் தலை வெடித்துச் சிதறிவிடும்’ என்று சாதுவை எச்சரித்திருக்கிறேன். இந்த தருணத்தில் உனக்கும் ஒரு வரம் கொடுக்கிறேன். அதன்படி, சாதுவின் நடவடிக்கைகள் மூலம் அவர் சொல்ல நினைக்கும் விஷயத்தை நீ புரிந்துகொள்ளலாம். அதன்படி நடந்து நாட்டை வளப்படுத்தலாம். ஆனால், இதிலும் ஒரு நிபந்தனை இருக்கிறது. நீ புரிந்துகொண்ட விஷயத்தை தவறாகப் பயன்படுத்தினால், உன் தலை வெடித்துச் சிதறும்’ என்று கடவுள் என்னிடம் சொன்னார். சாது கஷ்டப்பட்டு பெற்ற வரத்தின் பலன் என் மூலம் நாட்டிற்கு கிடைக்கிறது. கடவுளின் நிபந்தனை, ஏமாற்றுக்காரர்களிடமிருந்து சாதுவை காப்பாற்றியிருக்கிறது. கடமையிலிருந்து தவறாத வகையில் என்னையும் வழி நடத்துகிறது’ என்று சொன்னான் அரசன்.

ஆச்சரியத்தோடு பார்த்தாள் அரசி. ‘அரசே! அவர் ஏதோ உளறுகிறாரே அதன் அர்த்தம் என்ன?’ என்று கேட்டார் அரசி. தொடர்ந்து பேசினான் அரசன்.

‘சாது தெரிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. தனக்கு தெரியாததையும், புரியாததையும் அவர் சொல்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதையும் வெளிப்படையாகச் சொல்ல விரும்பல. அவர் அறிந்த விஷயத்தை நான் புரிந்துகொண்டேன். அதனால் என்னை புத்திசாலி என்றும், நான் அவரை எப்படி புரிந்துகொண்டேன் என்பதை அறிந்த மக்கள் அதிபுத்திசாலி என்றும் குறிப்பிடுகிறார்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அரசன்.

சாது யார்? அரசன் யார்? அவர் புரிந்துகொண்டது என்ன? கதையில், ‘வரம் கொடுக்கும் கடவுள்’ என்று குறிப்பிட்டது மக்களைத்தானே? என்ற கேள்விகளுக்குப் பதிலை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ரஜினியின் கருத்தை அரசு புரிந்துகொண்டுள்ளது. இதை மக்களும் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

‘நாட்டின் நதிகளை இணைத்து, அதற்கு நதிகள் கமிஷன் அமைக்கிறோம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆண்டவனின் ஆசீர்வாதத்தோட, மக்களின் தயவோட, மக்கள் என்ன கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தால், முதல் வேலையாக, நாட்டின் எல்லா நதிகளையும் இணைக்க வேண்டும். அதை மட்டும் செய்தார்கள் என்றால், நாட்டில் பாதி வறுமை போய்விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்’ என்று தனது கருத்தை ரஜினி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது. இனி புரிந்துகொள்ள வேண்டியது நாம்தான். புரிஞ்சதை அறிஞ்சவன் அதிபுத்திசாலி அல்லவா!

நன்றி – சாது ஸ்ரீராம்

தினமணி

Leave a Reply