மாநிலங்களவை பூஜ்ஜிய நேரத்தில் வரலாற்றுசாதனை படைக்கப் பட்டுள்ளது என்று அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்விநேரம், பூஜ்ஜியநேரம் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கேள்வி நேரத்தில் கேள்விகளை எழுப்ப 10 நாட்களுக்கு முன்பாக அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளிக்கவேண்டும். அதேநேரம் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து முன் கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் பூஜ்ஜியநேரத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பமுடியும். எனினும் அன்றைய தினம் காலை 9 மணிக்கு முன்பாக நோட்டீஸ் அளிக்கவேண்டும்.

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கேள்விநேரம், பூஜ்ஜியநேர அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது 10 உறுப்பினர்களின் நோட்டீஸ்கள் ஏற்கப்பட்டன. அதன்படி கவுரிலங்கேஷ் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப் பட்டது, விமான விபத்துகள், உத்தரபிரதேசம், குஜராத் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழந்தது உட்பட பல்வேறு முக்கியபிரச்சினைகள் குறித்து 10 உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தனர். கூடுதலாக ஓர் உறுப்பினரின் கேள்வியும் அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து அவைத் தலைவர் வெங்கய்யநாயுடு கூறியபோது, “மாநிலங்களவை வரலாற்றில் இது ஒருவரலாற்று சாதனை. பூஜ்ஜியநேரம் சுமுகமாக நடைபெற உதவிய எம்.பி.க்களுக்கு நன்றி” என்றார்.

Leave a Reply