மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் அமலில் உள்ள ஜிஎஸ்டி.யில் ஐந்து பிரிவுகளில் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி, பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் தற்போது 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்தசூழ்நிலையில் ஜிஎஸ்டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு ஏன்தயங்குகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி, முந்தைய ஐ.மு. கூட்டணி அரசு தயாரித்த ஜி.எஸ்.டி. வரைவு மசோதாவில் ஜிஎஸ்டி. வரம்புக்குள் பெட்ரோலியபொருட்கள் சேர்க்கப்பட வில்லை. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயுவை ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார். எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு விகிதங்களில் மதிப்புக் கூட்டு வரி வசூலிக்கப் படுகிறது.

எனவே மத்திய, மாநில அரசுகள் இடையே பல்வேறு பிரச்னைகள் எழும். இதுகுறித்து மாநில அரசுகள் இடையே, ஒருமித்த கருத்து ஏற்படவேண்டும். எனவே இவற்றை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுடன் மட்டுமே இதைசெயல்படுத்த முடியும். எனவே அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரம்பில் பெட்ரோலிய பொருட்களை சேர்க்க விரைவில் மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளும் என நம்புகிறேன் என்று கூறியுள்ள அவர், ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலிய பொருட்களை சேர்க்கும் யோசனைக்கு மத்திய அரசு ஆதரவு உண்டு என்று கூறியுள்ளார்.

Leave a Reply