பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான அழுத்தம்காரணமாகவே JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகாரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் JEE மற்றும் NEET தேர்வுகள் ஜூலைமாதம் நடைபெறவிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. செப்டம்பர் 1 முதல் 6 வரை JEE தேர்வுகள் நடைபெறும் என்றும், செப்டம்பர் 13ம் தேதி NEET தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா மற்றும் நாட்டின் சிலபகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள சமயத்தில் இந்த தேர்வை நடத்தக் கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகத் தான் தொற்று நோய்க்கு மத்தியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான தேர்வை நடத்த முடிவெடுத்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘JEE தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களில் 80% பேர் ஏற்கெனவே அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துவிட்டார்கள். தேர்வை நடத்துமாறு மாணவர்களும், பெற்றோர்களும் அழுத்தம்கொடுத்தனர். இன்னும் எத்தனைகாலம் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற அச்சம் மாணவர்கள் மனதில் எழுந்தது. அதனால் அவர்கள் கவலையடைந்தனர். நாங்கள் மாணவர்களுடன் இருக்கிறோம். அவர்களது பாதுகாப்புதான் முக்கியம். அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்படும்’ என்று கூறியுள்ளார்.

Comments are closed.