பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரபல முன்னாள் கிரிக்கெட்வீரர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது.

தேர்தலுக்கு பின் சிறுசிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 18-ந் தேதி பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் பிரதமர் மோடியும் வாழ்த்துதெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.

இதுபற்றி நேற்று முன்தினம் பாகிஸ்தானின் புதிய வெளியுறவு மந்திரி மஹ்மூத் ஷா குரேசி கூறுகையில், “பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திரமோடி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தையை தொடங்கு வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இவ்வாறு கூறிய நிலையில் மத்திய அரசு இதை நேற்றுமறுத்தது. மேலும் இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி எழுதிய வாழ்த்து கடிதத்தை முழுமையாகவும் வெளியிட்டது.

அந்த வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “அண்டை நாடான பாகிஸ்தானுடன் அமைதியான முறையில் உறவை பராமரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும் ஆக்கப் பூர்வமாகவும், அர்த்தமுள்ள விதமாகவும் இணைந்து செயல் படுவதை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா எதிர்பார்க்கிறது. அதேநேரம், தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத செயல்கள் இல்லாத நிலையை உறுதிப்படுத்துவதும் அவசியம் ஆகும்” என்று தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியின் கடிதத்தில் எந்த இடத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை என்ற சொல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply