வங்கிகளில், கோடிக் கணக்கில் கடன்வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும், பொருளாதார குற்றவாளிகளை தடுக்க, ஒன்பது அம்சதிட்டத்தை, 'ஜி20' மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி சமர்ப்பித்தார்.

வங்கியில், 9,000 கோடி ரூபாய் கடன்வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.


இதே போல், மும்பையை சேர்ந்த வைரவியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர், வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து, 13 ஆயிரம்கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடினர்.இத்தகைய மோசடியாளர்களை பிடிக்க, மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், இதில் பலசிக்கல்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி, பலநாடுகளும், இந்தபிரச்னையை சந்தித்து வருகின்றன.இந்நிலையில், ஜி2௦ மாநாட்டில், பொருளாதார குற்றவாளிகள் தப்புவதை தடுக்க, ஒன்பது அம்ச  திட்டத்தை, பிரதமர் மோடி சமர்ப்பித்தார்.அதன் விவரம்:

ஒரு நாட்டில் மோசடி செய்து விட்டு, மற்றொரு நாட்டுக்கு தப்பிசெல்லும் பொருளாதார குற்றவாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பொருளாதார குற்றவாளிகள், அவர்களது உறவினர்களின், வங்கி கணக்குகளை முடக்கவேண்டும்; அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பவும், நடவடிக்கை எடுக்கவேண்டும்.


பொருளாதார குற்றவாளிகள், தங்கள் நாட்டில் நுழைவதை தடுக்கவும், அவர்கள் பாதுகாப்பாக தங்கியிருப்பதை தடுக்கவும், கடும்சட்டம் ஒன்றை, ஜி2௦ நாடுகள் ஏற்படுத்த வேண்டும்.ஊழலுக்கு எதிராகவும், அமைப்பு ரீதியான பன்னாட்டு குற்றங்களுக்கு எதிராகவும், ஐ.நா., மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, முழுமையாக நிறைவேற்றவேண்டும்.சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுக்க, சர்வதேச நாடுகள் உருவாக்கியுள்ள, எப்.ஏ.டி.ஏ., எனப்படும், நிதிகுற்றங்கள் தடுப்பு அமைப்பு, பொருளாதார குற்றவாளிகளை பிடிப்பதற்கு, சர்வதேசளவில் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.குற்றவாளிகள் பற்றிய தகவல்களை, விசாரணை அதிகாரிகள் பகிர்ந்துகொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.பொருளாதார குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், அவர்களை நாடுகடத்தவும், அவர்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைளுக்கும், ஒருபொதுவான செயல்திட்டத்தை, எப்.ஏ.டி.ஏ., உருவாக்க வேண்டும்.பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை கண்டறிந்து, அவற்றை முடக்க, ஜி2௦ நாடுகள் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

 

Tags:

Leave a Reply