மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றதேர்தலில், பாஜக மற்றும் சிவசேனா இணைந்து தலா 135 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 350 இடங்களுக்கு மேல் வென்று அபார வெற்றிபெற்றது. இதில் பாஜக மட்டுமே தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்களவை தேர்தலின்போது பாஜக, சிவசேனா கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மராட்டிய மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், இந்தகூட்டணி 41 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 23 இடங்களிலும், 23 இடங்களில் போட்டியிட்ட சிவசனா 18 இடங்களிலும் வென்றன.

இதனிடையே வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மகாராஷ்டிர மாநிலத்தில், பேரவைதேர்தல் நடைபெற உள்ளது. மராட்டிய மாநிலத்தில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலிலும் சிவ சேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவுசெய்துள்ளது பாரதிய ஜனதா.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவரும், மாநில வருவாய்த் துறை அமைச்சருமான சந்திரகாந்த் பாட்டீல், வரும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தேசிய தலைவரான அமித்ஷாவும், மாநில முதல்வரான தேவேந்திர பட்னாவிசும் கூறியுள்ளனர்.

இந்த முடிவிலிருந்து பாஜக ஒரு போதும் பின்வாங்காது. வரும் சட்டமன்ற தேர்தலின் போது மகாராஷ்டிர மாநிலத்தில், சரி சமமான தொகுதி எண்ணிக்கையில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி மாநிலத்தில் மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தலா 135 இடங்களில் போட்டியிடும் என்றார். மீதமுள்ள 18 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என தகவல் தெரிவித்தார்.

தற்போது எங்கள்கட்சிக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் தவிர 8 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே தொகுதி ஒதுக்கீட்டின்படி பார்த்தால் 5 இடங்கள் தான் எங்களுக்கு கூடுதலாக வருகிறது.

சிவசேனாவின் நாளேடா சாம்னாவில், பாஜக பற்றி சரமாரியான விமர்சனங்கள் வந்தபோது இது குறித்த உங்கள் பதில்களை செய்திதாள் வழியாக தெரியப்படுத்தி உறவில் விரிசல் ஏற்படுத்திவிட வேண்டாம் என முதல்வர் பட்னாவிஸ் கோரிநார். சிவசேனாவுடன் முதல்வர் பட்னாவிஸ் நல்ல உறவை பராமரித்துவருகிறார். எனவே மாநில அளவில் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக திகழ்கிறது என்றார் சந்திரகாந்த் பாட்டீல்.

Comments are closed.