இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப் படுவதால் நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடுமுழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் கோயில்களில் குவிந்து, வழிபாடு நடத்திவருகின்றனர். சிவன் கோயில்களில் நடக்கும் 6 கால பூஜைகளில் கலந்துகொண்டு, ‘ஓம் நமச்சிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து, இரவில் கண் விழித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாயலங்களில் சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அதிகளவில் சாதுக்களும், பக்தர்களும் குவிந்துள்ளனர். ம.பி., – உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் ஆலயம், பஞ்சாப் – அமிர்தசரசில் உள்ள சிவாலய பாக் பையான் ஆலயம், டில்லி சாந்தினிசவுக் பகுதியில் உள்ள கெளரிசங்கர் ஆலயம், மகாராஷ்டிரா – மும்பையில் உள்ள பாபுல்நாத் ஆலயம் ஆகியவற்றில் மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் பலபுரகி பகுதியில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் 25 அடி உயரத்தில் 300 கிலோ பயறுவகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர். ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

சிவராத்திரி இரவில்தான் இந்தப் பிரபஞ்சமே லிங்க வடிவம் கொண்ட தோற்றமாய் உணரமுடியும். அந்தப் பிரபஞ்சப் பெருவெளிக்குள் நாமும் இருக்கிறோம் என்கிற நினைப்பே சிவனோடு கலந்திருக்கிறோம் என்கிற பேருணர்வை நமக்கு உண்டாக்கும்.

திரயோதசி, சதுர்த்தசி ஆகிய இரண்டு திதிகளுமே விசேஷமானவை. திரயோதசி, அன்னை பார்வதியின் வடிவம். சதுர்த்தசி, சிவபெருமானின் வடிவம் என்கின்றன புராணங்கள். மகாபிரளய காலத்துக்குப் பின் சிவபெருமானுள் அன்னை உமாதேவி ஒடுங்கி நின்ற தினமே மகாசிவராத்திரி. அன்னை, இந்தப் பிரபஞ்சத்தின் சக்தி. ஐயன், இந்தப் பிரபஞ்சப் பெருவெளி. இரண்டும் இணைந்து அருளிய தினம் என்பதே சிவராத்திரியின் பொருள். சிவமும் சக்தியும் இணைந்து அருளும் தினம் என்பதாலேயே, இந்த தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் வழிபடுவதன்மூலம் வேண்டும் வரங்களைப் பெற முடியும். இதற்கு புராணங்களில் பல்வேறு நிகழ்வுகள் சான்றுகளாகக் கூறப்படுகின்றன.

வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை என்றாலும், அவை இறை வடிவங்களே என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வேதத்துக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. நான்கு வேதங்களில் நடுநாயகமாகத் திகழும் வேதபாகம், யஜுர்வேத ஶ்ரீ ருத்ரம். அந்த ஶ்ரீ ருத்ரத்திலும் மத்தியில் இருக்கும் சொல், ‘சிவ’ என்பது. இந்த சிவ என்னும் வார்த்தையைச் சொல்ல, சகல வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். எளிதில் அனைவராலும் சொல்ல முடிகிற மந்திரம், சிவ மந்திரம். அந்த சிவ மந்திரத்தைத் தவறாமல் உச்சரிக்கவேண்டிய தினம், சிவராத்திரி.

இந்த உலகில் நன்மை தீமைகளை தெரிந்துசெய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஒரே பலன்தான். தெரியாமல் செய்ததனால் நமக்கு வரவேண்டிய நன்மை தீமைகள் வராமல் போகாது. அதுதான் சிவராத்திரி மகிமை நமக்குச் சொல்லும் பாடம்.

குரங்கு ஒன்று வில்வமரத்தின் மீதமர்ந்து இரவு முழுவதும் இலைகளைப் பிய்த்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. இலைகள் விழுந்த இடத்தில் இறைவனின் லிங்கத் திருமேனி. அன்றைய இரவு மகாசிவராத்திரி. விடியும் வேளையில் அறியாமல் செய்த வில்வார்ச்சனைக்கு இறைவன், குரங்கை மறுபிறவியில் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார். சக்கரவர்த்தியாய் பிறந்தவரே முசுகுந்த சக்கரவர்த்தி.

தனக்கு வாய்த்த வரத்தை அறிந்ததும் முசுகுந்தர் வேண்டிக்கொண்டது என்ன தெரியுமா… அறியாமல் சிவபூஜை செய்த குரங்குக்கே இறைவன் இவ்வளவு பெரிய பதவியை அருள்வார் என்றால், அறிந்தே சிவபூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் எவ்வளவு இருக்கும் என்று இந்த உலகம் அறிந்துகொள்ள, “சக்கரவர்த்தியாய் பிறந்தாலும் தன் குரங்குமுகம் மாறக்கூடாது” என்று வேண்டிக்கொண்டார்.

அதனால்தான், நன்மைகளை அறியாமல் செய்தால்கூட நன்மையே உண்டாகும் என்கின்றனர் பெரியோர்கள். சிவராத்திரி நாளை அறியாமல், உயிருக்குப் பயந்து மரத்திலேறிய வேடன், கீழே விழுந்துவிடக்கூடாது என்று இரவெல்லாம் விழித்திருந்து இலைகளைப் பறித்துப் போடுகிறான். அதுவே சிவார்ச்சனை ஆனது. அதன் பலனாக, அவன் மறுபிறவியில் ராமனையே தோழனாகக்கொள்ளும் குகப் பதவியை அடைந்தான்.

ஒன்று: இரவெல்லாம் விழித்திருப்பது

இரண்டு: இறைவனை வழிபடுவது.

விரத முறைகள்

சிவராத்திரி அன்று, காலை முதலே சிவ நாம ஜபம் செய்ய வேண்டும். குளித்து முடித்து, ஆலயம் சென்று இறைவனை வழிபடவேண்டும். வீடுதிரும்பி அன்றாடப் பணிகளை முடித்து, மாலை மீண்டும் குளித்து வழிபடத் தயாராக வேண்டும். அன்றைய நாளில், நான்குகாலமும் பூஜைகளைச் செய்யவேண்டும். தனியாக வீட்டில் ஷணிக (தற்காலிக) லிங்கம் கொண்டு வழிபாடு செய்ய இயலாதவர்கள், ஆலயத்துக்குச் சென்று நான்கு கால பூஜைகளையும் கண்டு வணங்கலாம்.

ஒவ்வொரு காலத்துக்கும் வழிபடவேண்டிய மூர்த்தங்கள், பூஜைப் பொருள்கள், நைவேத்தியங்கள் ஆகியனவற்றை ஆகமங்களில் வகுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலத்துக்கான பூஜை தரிசனத்துக்கும் ஒவ்வொரு விசேஷித்த பலன் உண்டு.

Comments are closed.