சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒருஹிந்து என்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின்பேச்சு தொடர்பாக, அவர்மீது வழக்குப்பதிவு செய்யவும், அக்கட்சி அங்கீகாரத்தை ரத்துசெய்யவும் பாரதிய ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மக்கள்நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தனத கட்சி வேட்பாளரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

பயங்கரவாதம் எந்தமதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு. பயங்கரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஏற்கமாட்டார்கள்.

முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை. காந்தியாரின் சிலைக்கு முன்பு நின்றுகொண்டு இதைச் சொல்கிறேன். ஏனென்றால் நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒருஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே  என்றார்.

இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்ற மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலின் பேச்சு தொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவுசெய்யவும், அக்கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாரதிய ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கபட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்தவரும் பிரபல வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா திங்களன்று தேர்தல் ஆணையத்தில் மனுஅளித்தார். அவரது மனுவில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி இவ்வாறு பேசியுள்ளார்.

எனவே அவரது தேர்தல் பிரசாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும்.

அவர் மீது வழக்குத் தொடர்வதுடன், மக்கள் நீதிமய்யம் கட்சியின் அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply