மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு பயன் தரும் எந்த திட்டங்களும் இல்லை. தமிழகத்துக்கு போதிய நிதியை மத்தியஅரசு தரவில்லை என்று ஆட்சியாளர்கள் குறைகூறுகின்றனர். ஆனால் மாநிலத்துக்கு கிடைக்கவேண்டிய வருவாயை முறையாக வசூலிப்பதற்கும், வருவாயை அதிகரித்துக்கொள்வதற்கும் எந்தவிதமான நடவடிக்கையையும் தமிழகஅரசு எடுக்கவில்லை.

மத்திய அரசை பொறுத்த வரையில் தமிழகத்துக்கு முறைப்படி கொடுக்கவேண்டிய நிதியை எந்தவித குறைபாடும் இன்றி சரியான அளவில் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினை களுக்காக போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இதுமத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என சிலர் திசை திருப்புகின்றனர். ஆனால் மாநிலஅரசு பலவீனமான அரசாக, பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் இருப்பதால்தான் மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். மக்கள் பிரச்சினைகளில் தீர்வுகாண மாநில அரசு வேகமாக செயல்படவேண்டும்.

இரட்டை இலை சின்னம் மோடியின் கையில் உள்ளது என்று சில தலைவர்கள் பேசி வருகின்றனர். பாரதிய ஜனதாவிடம் வெற்றிச்சின்னமான தாமரைசின்னம் உள்ளது. அதுவே எங்களுக்கு போதுமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply