குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டிவந்து அம்மனை வழிபடுவார்கள். இதனால், இந்தகோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசி கொடை நாட்களிலும், முக்கிய வழிபாட்டு நாட்களிலும் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிசெல்வது வழக்கம்.

 

இந்த கோவிலுக்கு ரூ.4 கோடி மதிப்பில் தங்கரதம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு அதற்காக ஸ்ரீஅம்மன் கோல்டன் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைக்கப்பட்டது. இது தனிநபர் பங்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு பக்தர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பக்தர்கள் தங்க தேருக்காக தங்கம் அல்லது பணம் அளிக்கலாம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

பக்தர்கள் நன்கொடை அளிப்பதற்கு வசதியாக நன்கொடை வசூல்முகாம் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி கோவில் முன்பு நடந்தது. இதையடுத்து கடந்த 8 மாதங்களாக தங்கரதம் செய்யும் பணி நடந்துவந்தது.

 

மயிலாடி ஸ்தபதி கல்யாண சுந்தரம் ரதத்தை வடிவமைத்தார். 12½ அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டது. இதன் மேல் 350 கிலோ எடை செம்பு தகடு பொருத்தப்பட்டு, 10 கிலோ எடையில் தங்கமுலாம் பூசும் பணி நிறைவடைந்தது.

 

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தங்கரதம் கன்னியா குமரி பகவதியம்மன் கோவிலுக்கும், சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கும் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து மண்டைக்காடு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ரதத்தை சுற்றிலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள முக்கிய அம்மன் கோவில்களின் அம்மன் திருவுருவங்கள் பதிக்கப்பட்டு சிம்மவாகனம் ரதத்தை இழுப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த ரதம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் உற்சவ மூர்த்தியை ரதத்தில் அமர்த்தி, தமிழ்நாட்டில் உள்ள 32 முக்கிய கோவில்களில் இருந்து எடுத்து வரப்பட்ட வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலைசுற்றி பக்தர்கள் 3 முறை இழுத்து வந்தனர்.

 

இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்பு மணி, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன் யானந்தா மகாராஜ், திருக்கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply