மதுரா மற்றும் காசியில் மசூதி அல்லது கோவில் இருக்க வேண்டுமா என்று சமூகம் முடிவு செய்யும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரவி, சமூகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் பாஜக முடிவெடுக்க முடியாது என்றும், அயோத்தியில் உள்ள ராமர்கோவில் தனது சொந்த போராட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

“இது பாஜகவுடன் இணைந்த 500 ஆண்டுகால போராட்டமாகும். இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இந்திய சமுதாயமே திறன்கொண்டது” என்று அவர் கூறினார். சமூகம் சரியான நேரத்தில் சரியானமுடிவை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

கயன்வாபி மசூதி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுடன் ஒரு எல்லைச் சுவரைப் பகிர்ந்து கொள்கிறது என்பதையும், ஷாஹி இட்கா மசூதி மதுராவில் உள்ள கிருஷ்ணா ஜன்மபூமி கோவிலுக்கு அடுத்த படியாகவும் உள்ளது என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.

ராமர் கோவில் அறக்கட்டளைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்த உடனேயே, பாஜக தலைவரும் கிராம அபிவிருத்தி மற்றும் கர்நாடகாவில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா, ஆகஸ்ட் 5’ம் தேதி “அடிமைத்தனத்தின் சின்னம் எங்கள் கவனத்தைத் தொந்தரவு செய்கிறது, மேலும் நீங்கள் ஒரு அடிமை என்பதை சுட்டிக்காட்டுகிறது” என்று கூறியிருந்தார்.

அவர் தனது நிலைப்பாட்டை மேலும் மீண்டும் வலியுறுத்தியதோடு, உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் அயோத்தியின் வரிசையில் அடிமைத்தனத்தின் அடையாளங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கனவு இருப்பதாகக் கூறினார்.

“மதுரா மற்றும் காசியில் உள்ள மசூதிகள் அழிக்கப்படும். கோவில்கள் மீண்டும் கட்டப்படும்” என்று அவர் கூறிவந்த நிலையில், அதே கர்நாடகாவைச் சேர்ந்தவரும், சமீபத்தில் பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட சி.டி.ரவி, இதுகுறித்து மக்கள் தான் முடிவுசெய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் கிருஷ்ண ஜென்மபூமி தொடந்த வழக்கு குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இதே போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மத ரீதியிலான விவகாரங்களில் நேரடியாக தலையிட  மத்திய அரசு மற்றும் பாஜக தலைமை விரும்பவில்லை என்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.