மத்திய அரசின் சாதனைத் திட்டங்களை பாஜக எம்பி.க்கள் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளைச் சேகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு எம்.பி.க்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறியதாக பாஜக எம்.பி.க்கள் கூறியதாவது: இந்தமுறை விவசாயிகள், ஏழைமக்களின் நலனுக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்களுக்காக மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளோம். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக உயர பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளோம்.

இதுபோன்று பல நல்லதிட்டங்கள் குறித்து மக்களிடையே பாஜக எம்.பி.க்கள் எடுத்துக் கூறி அதை பிரபலப்படுத்த வேண்டும். இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பை நமது கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார் என்று பாஜக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

அமித் ஷா

பாஜக தலைவர் அமித் ஷா பேசும் போது, “பாஜக உறுப்பினர்கள் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஜனநாயகமற்ற அரசியலை நடத்திவருகிறார். பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசிய போது ராகுல் காந்தி குறுக்கிட்டுப் பேசியது சரியல்ல. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பேசும்போது எதிர்க்கட்சிகள் இப்படி அமளியில் ஈடுபட்டதில்லை. 2004 முதல் 2014 வரை பிரதமராக மன்மோகன் இருந்தார். அந்தகாலத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியபோது இதுபோன்று எதிர்க் கட்சிகள் நடந்து கொண்டதே இல்லை” என்றார்.

மத்திய அமைச்சர் அனந்த்குமார் கூறும்போது, “பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடையே பிரபலமடையச் செய்ய பூத்கமிட்டிகளை எம்.பி.க்கள் ஏற்படுத்தி அவ்வப்போது கூட்டங்கள் நடத்த பிரதமர் அறிவுறுத்தினார். மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை பல்வேறு இடங்களில் நடத்தி திட்டங்களை பிரபலப்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பிரதமர் மோடி கூட்டத்தில் எடுத்துரைத்தார். வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெறும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும். இதற்காக தொகுதிதோறும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது பணியாற்றவேண்டும்’’ என்று தெரிவித்தார். –

Leave a Reply