மத்திய அரசு 10 ஆயிரம்பேட்டரி கார்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இவற்றை சார்ஜ்செய்வதற்கு 4 ஆயிரம் சார்ஜிங் யூனிட்டுகளுக்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. மத்திய நிலக்கரி, சுரங்கம், மின் சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறை அமைச்சகம் பேட்டரி கார்களை வாங்கி பிற துறைகளுக்கு வாடகைக்குவிடவும் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான இஇஎஸ்எல் நிறுவனம் ஃபேம் திட்டத்தின்கீழ் பேட்டரி கார் உபயோகத்தை அதிகரிக்க வசதியாக இந்தமுடிவை எடுத்துள்ளது.

2030-ம் ஆண்டில் இந்தியாவில் பேட்டரிகார்கள் மட்டுமே உற்பத்தியாகும் என மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் குறிப்பிட்டிருந்தார். ஹைபிரிட் கார்கள் (பகுதியளவில் பேட்டரி மற்றும் வழக்கமான எரி பொருள்) அரசின் இலக்கை எட்ட உதவாது என்று குறிப்பிட்டவர், பேட்டரிவாகன புழக்கம் மட்டுமே சுற்றுச்சூழலை காக்க உதவும் என்று பியுஷ்கோயல் குறிப்பிட்டார். இதன் மூலம் மட்டுமே எரிபொருள் நுகர்வைக் குறைக்கமுடியும் என்று சுட்டிக் காட்டினார்.

இந்த கார்கள் அனைத்தும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இரண்டு கட்டங்களாக பேட்டரி வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. 10 ஆயிரம் கார்களுக்கு டெண்டர் கோரப்பட்டிருந்தாலும் முதல் தவணையாக ஆயிரம் கார்களை வாங்கி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சப்ளைசெய்யும் நிறுவனங்கள் கார்கள் மற்றும் பேட்டரிக்கான உத்தரவாதம் (வாரண்டி) அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நான்கு கதவுகளைக்கொண்ட செடான் ரகக்கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ. முதல் 150 கி.மீ தூரம் ஓடக் கூடியவையாக உள்ளன. இத்தகைய கார்களை முதல் கட்டமாகவாங்க உள்ளதாக இஇஎஸ்எல் நிர்வாக இயக்குநர் சவுரப் குமார் கூறினார்.

இவை அனைத்தும் டெல்லி மற்றும் என்சிஆர் பிராந்தியத்தில் அரசுத் துறைகளுக்காகப் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கார்களை சார்ஜ்செய்வதற்கு வசதியாக 400 இடங்களில் சார்ஜிங் மையம் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை நிறுவும் பணியில் என்டிபிசி மற்றும் பவர்கிரிட் ஆகிய நிறுவனங்கள் ஈடுபடும்.

தற்போது நாட்டிலேயே பேட்டரியில் இயங்கும்கார்களை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் செடான் ரகம் வெரிடோ மாடலாகும். இந்தக்காரின் விலை ரூ. 12 லட்சம் முதல் ரூ. 13 லட்சம் வரை உள்ளது. மத்திய அரசு வாங்க உள்ள பேட்டரி கார்களுக்கான டெண்டரில் வெரிடோவும் போட்டியிடும் என தெரிகிறது.

தற்போது பேட்டரி கார்களுக்கான டெண்டரை அரசேகோரியுள்ளதால் பேட்டரி கார்களுக்கான தேவை அதிகரிக்கும் என நம்பலாம். தலை நகர் டெல்லியின் காற்றுமாசு அளவைக் குறைக்க இவற்றின் வருகை பெருமளவு உதவும்.

Leave a Reply