மம்தா பானர்ஜியின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு உதவியுள்ளது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சௌதரி விமரிசித்துள்ளார்.

17-வது மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் பாஜக 18 இடங்களில் வெற்றிபெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இடதுசாரிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதுவே, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றிருந்த இடம் வெறும் 2, திரிணமூல் காங்கிரஸ் வென்றிருந்த இடம் 34 என்பது குறிப்பிடதக்கது.

கடந்த மக்களவைத் தேர்தலில் 16 இடங்களைக் கூடுதலாகவென்றதன் மூலம் பாஜக மேற்குவங்க மாநிலத்தில் தனக்கான அரசியல் இடத்தை உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சௌதரி பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு மம்தாவே பொறுப்பு என்று விமரிசித்துள்ளார். இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியவர்,

“மேற்கு வங்கத்தில் பாஜக கால் ஊன்றியதற்கு மம்தாபானர்ஜி மற்றும் அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் தான் காரணம். பாஜகவுக்கு இடமளிக்கும் வகையில் மம்தா மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே எதிர்க் கட்சிகளை வலுவிழக்கச் செய்தது” என்றார்.

Comments are closed.