மருத்துவம், பல்மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு தேசியளவிலான நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஓராண்டுக்குத் தள்ளிவைப்பதற்கு அவசரச்சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது.

நிகழ் கல்வியாண்டில் மருத்துவம், பல்மருத்துவம் ஆகிய படிப்புகளில் தேசிய அளவிலான ஒரே தகுதித்தேர்வின் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
 மேலும், மாநில அரசுகளும், தனியார் கல்லூரிகளும் தாங்களாகவே நுழைவுத்தேர்வு நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.


இதை எதிர்த்து, பல்வேறுமாநில அரசுகள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. நிகழ் கல்வியாண்டிலேயே என்இஇடி தகுதித்தேர்வு நடத்தும் அளவுக்கு மாணவர்கள் தரப்பு தயாராகவில்லை என்று அவை தெரிவித்துள்ளன.


 இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நிகழ் கல்வி யாண்டிலேயே என்இஇடி தேர்வு நடத்துவதற்கு உகந்தசூழல் இல்லை என்று கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.


 மத்திய பாடத்திட்டமுறையில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்பதால், மாநில பாடத்திட்டத்தில், மாநில மொழிகளில் பயின்ற மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாவர்கள் என்றும் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.


 அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த அமைச்சர் ஜேபி.நட்டா, இந்தவிவகாரம் தொடர்பாக, விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில், என்இஇடி நுழைவுத்தேர்வை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 12 மாதங்களுக்கு தள்ளிவைப்பதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுதொடர்பாக, இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.


 இந்நிலையில், புதன்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், என்இஇடி நுழைவுத் தேர்வு விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply