''மாணவர்களின் ஆராய்ச்சி, இந்திய பாதுகாப்புத்துறையை, மேம்படுத்த உதவும்வகையில் இருக்கவேண்டும்,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறினார்.

ராணுவ கண்காட்சியை முன்னிட்டு, முப்படைகளில் ஏற்படும் தொழில் நுட்பம் சார்ந்த பிரச்னைகளுக்கு, தீர்வுகாண்பது தொடர்பான, தேசியளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

அதில், வெற்றிபெற்றவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களை, நிர்மலா சீதாராமன் வழங்கினார். முதல்பரிசு, 50 ஆயிரம் ரூபாய்; இரண்டாம்பரிசு, 30 ஆயிரம்; மூன்றாம் பரிசு, 10 ஆயிரம்; ஆறுதல்பரிசு, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

அப்போது, அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசியதாவது: ராணுவ கண்காட்சி நடத்த திட்டமிட்டபோது, குறுகிய காலம் மட்டுமே இருந்தது. இந்தப் போட்டிகளுக்கு, எவ்வளவு பேர் விண்ணப்பிப்பர் என்ற, கேள்வி எழுந்தது. குறைந்த எண்ணிக்கையில், மாணவர்கள் விண்ணப் பித்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில், போட்டிகளை நடத்த முடிவுசெய்தோம். ஆனால், குறுகிய காலத்தில், அதிக விண்ணப்பங்கள் வந்தன.

கல்லுாரி மாணவர்கள், தங்களின் பாடங்களை படித்தபடி, இரண்டாம் ஆண்டுமுதல், ஆராய்ச்சியில் ஈடுபடுவது பாராட்டுக் குரியது. இந்த கண்காட்சியின் மிகமுக்கியமான நிகழ்வு, இந்தப் போட்டிகளில், மாணவர்கள் பங்கேற்றதுதான்.

மாணவர்கள், மிகப் பெரிய அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் ஆராய்ச்சிக்கு, பாதுகாப்புத்துறை எப்போதும் துணைநிற்கும். பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன், எப்போதும் தொடர்பில் இருங்கள். உங்கள் ஆராய்ச்சி, பாதுகாப்புத்துறையை மேம்படுத்த, பயனுள்ளதாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Leave a Reply