மாணவர்களை தவறாக வழி நடத்தி, அவர்களை நீட்தேர்வுக்கு எதிராக தெருவில் இறங்கிபோராட வைப்பது தவறு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நீட்தேர்வுக்கு தமிழகம் எதிரானது அல்ல. அது வேண்டுமென்றே தமிழகத்திற்கு எதிரானது போல் முன்னிறுத்தப் படுகிறது. எத்தனை கிராமப்புற மாணவர்கள் நீட்தேர்வு மூலம் மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள், எவ்வளவு பேருக்கு நியாயம் கிடைத்திருக்கிறது, பாமர மக்கள், நடுத்தர குடும்பத்துக் குழந்தைகள் எந்தளவுக்கு மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள் என்று கணக்கே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தால் எப்படி? என்னிடம் கணக்கு இருக்கிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், பால்வியாபாரம் செய்பவர்கள் என 3000 மாணவர்கள் என்னை சந்தித்து நீட்தேர்வால் பயன் அடைந்ததாக சொல்லி இருக்கிறார்கள். நீட் தேர்வால் பணக்கார பிள்ளைகளும், வடஇந்திய மாணவர்களும் பயன் அடைந்ததாக தவறான கருத்து முன்னிறுத்தப்படுகிறது. நீட் தேர்வால் சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏழ்மையான, நடுத்தரகுடும்பத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசியல் வாதிகள் இந்த சூழ்நிலையை தங்கள் அரசியலுக்காகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

மாணவர்களை தவறாக வழி நடத்தி, அவர்களை தெருவில் இறங்கிபோராட வைப்பது தவறு. மாணவர்களே தெருவுக்கு வாருங்கள் என்று அரசியல்வாதிகள் அழைப்பது தவறு. எதுநல்லது கெட்டது என்று மாணவச் செல்வங்களுக்கே தெரியும்'' என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply