திரிபுராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோகவெற்றி பெற்றது.

25 ஆண்டுகால மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சிக்கு முடிவுகட்டி கட்சி புதிய வரலாறு படைத்தது.

திரிபுரா மாநிலத்தில் 20 ஆண்டுகளாக எளிமையான முதல்-மந்திரியாக இருந்த மாணிக் சர்க்கார் 5-வது முறையாக அரியணை ஏறும்வாய்ப்பை இழந்தார். சொந்த வீடுகூட அவருக்கு கிடையாது. இந்தியாவின் மிகவும் ஏழ்மையான முதல்வர் என்ற பாராட்டை பெற்றவர். முதல்மந்திரி பதவியை இழந்தபிறகு அரசு பங்களாவை காலி செய்துவிட்டு அவர் கட்சி அலுவலகத்தில் குடியேறினார்.

இந்தநிலையில் திரிபுரா மாநில பா.ஜனதா புதிய முதல்மந்திரியாக பிப்லாப் தேவ் நேற்று பதவியேற்று கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, எல்கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

திரிபுரா முன்னாள் முதல்- மந்திரியான மாணிக் சர்க்காரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிப்லால்தேவ் முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு அவரின் காலைதொட்டு வணங்கி ஆசி பெற்றார். இதுகுறித்து முதல்-மந்திரி பிப்லாப்தேவ் கூறியதாவது:-

பதவியேற்பு விழாவின் போது மாணிக் சர்க்காரின் காலைதொட்டு வணங்கியது நமது பராம்பரியத்தை மதிக்கத்தான். திரிபுராவில் 20 ஆண்டுகள் ஆட்சிசெய்த சர்க்கார் போன்ற மூத்த தலைவர்களின் அனுபவம் நமக்கு தேவை. அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற 100 நாட்கள் காலக்கெடுவை நாங்களே நிர்ணயித்து உள்ளோம். அந்தகாலக்கெடுக்குள் நிறைவேற்ற உறுதி எடுத்துள்ளோம்.

Leave a Reply