முத்தலாக் சட்டத்தை ஒருமித்தகருத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் மூன்று முறை தலாக்கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது.

இதையடுத்து, முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் புதிய சட்ட முன்வடிவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மக்களவையில் இன்று தாக்கல்செய்தார். இந்த சட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும், முஸ்லிம் அமைப்பகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை அப்படியே நிறைவேற்ற காங்கிரஸூம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிலதிருத்தங்கள் செய்ய வேண்டும், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டுள்ளது. இதுபற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது:

‘‘முத்தலாக் சட்டம் குறித்து பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. சட்டத்துக்கு புறம்பாக முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க இந்தசட்டத்தில் வகை செய்யப் பட்டுள்ளது. இதுபற்றி எதிர்கட்சிகள் மாற்று கருத்து தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் எதிர் கட்சிகளுடன் விவாதித்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ எனக்கூறினார்.

இதனிடையே, முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற மக்களவையில், ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. அதேசமயம், மாநிலங்கள வையில் எதிர்கட்சிகளின் ஆதரவுடன்தான் நிறைவேற்றும் சூழல் உள்ளது. எனவே இந்தமசோதாவை நிறைவேற்ற, பிஜூ ஜனதாதளம், திரிணமுல் காங்கிரஸ் உட்பட பிறகட்சிகளின் ஆதரவை பெற, பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.

முத்தலாக் சட்டமுன்வடிவில், "சட்டத்துக்கு புறம்பான முறையில் மூன்று முறை தொடர்ந்து தலாக்கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை அளிக்கப்படும். இதை அவர்கள் வாய்மொழி, கடிதம், இமெயில், கைப்பேசியின் குறுந்தகவல் உட்பட எந்தவகையிலும் அளிக்க முடியாது. இதை மீறி, முத்தலாக் கூறும் முஸ்லிம் ஆண்கள் மீது அளித்து அவர்கள் கைது செய்யப் பட்டால் ஜாமீன் தரப்பட மாட்டாது. இத்துடன், விவாகரத்து பெறும் பெண்களுக்கு முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பிற்கு பொறுப்பேற்கவும் வசதிசெய்யப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply