பாஜக  மகளிர் அணியினரின் 5-வது தேசியமாநாடு குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 60, 70 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, இப்போது நாட்டுமக்கள் பா.ஜ.க  மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முந்தைய அரசுகள் பெண்களுக்கு அடிப்படைவசதிகள் உள்பட எதுவும் செய்யவில்லை. அவர்கள் வாக்குறுதி மட்டுமே கொடுத்தனர்.

60, 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சிசெய்தவர்கள் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க தவறிவிட்டனர். சமூக சீர்திருத்தம் மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஆகியவற்றுக்காக முந்தைய அரசுகள் உரியநேரத்துக்காக காத்துக்கொண்டு இருந்தன.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் சமூகத்தின் பார்வை பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கு நல்லமாற்றத்தை நோக்கி செல்கிறது. முதல்முறையாக அரசின் முக்கிய திட்டங்கள் பெண்களை சார்ந்தே உள்ளது. உதாரணமாக தூய்மை இந்தியாதிட்டம், இலவச எரிவாயு திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் போன்றவை பெரும்பாலும் பெண்களுக்கானதாகவே உள்ளது.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் 75 சதவீத வீட்டு உரிமை யாளர்கள் பெண்கள்தான். 18 கோடி வங்கி கணக்குகள் பெண்களுக்குரியது. ஆண்-பெண் பாலின விகிதாச்சாரமும் அதிகரித்துள்ளது. பாதுகாப்புத்துறை மந்திரிகள் குழுவில் முதல் முறையாக 2 பெண்கள் இணைந்துள்ளனர்.

விமானப்படையில் போர் விமான பைலட்டுகளாக பெண்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். கடற்படையிலும் பெண் அதிகாரிகள் பிரிவு உள்ளது. கடத்தல் தடுப்புசட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது.

கடும் எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தடைகள் இருந்த போதிலும், அரசு முத்தலாக் சட்டத்தை கொண்டுவருவதில் உறுதியாக உள்ளது. இதன் மூலம் முஸ்லிம் பெண்கள் மிகப் பெரிய வாழ்க்கை அச்சுறுத்தலில் இருந்து விடுபடமுடியும். இதுமட்டுமல்ல, முஸ்லிம் பெண்கள் ஹஜ்யாத்திரை செல்வதற்கு அவர்களுடன் ஆண்கள் கண்டிப்பாக செல்லவேண்டும் என்ற பிரிவை நீக்கியுள்ளோம்.

முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல் சுதந்திரத்துக்கு முன்பே ஆமதாபாத் நகரசபை தலைவராக பெண்ணை நியமித்து அதிகாரமளித்தார். அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை நாட்டுமக்கள் பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply